அவிநாசியில் ரூ. 7.97 கோடியில் கலை அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம்

அவிநாசி,ஜூன்25:அவிநாசியில் ரூ.7.97 கோடி மதிப்பில் கலை அறிவியல் கல்லூரிக்கு கட்டப்பட்ட புதிய  கட்டிடத்தை நேற்று  தமிழக முதல்அமைச்சர் எடப்பாடிபழனிசாமி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.திருப்பூர் மாவட்டம் அவிநாசியில்  அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு கலை கல்லூரி  தொடங்கப்பட்டு,  செயல்பட்டு வந்தது. இந்நிலையில், அதே பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு 8.17  ஏக்கர் பரப்பில், மொத்தம் ரூ. 7.97 கோடி மதிப்பில் கலை அறிவியல் கல்லூரிக்கு  புதிய  கட்டிடம் கட்டப்பட்டு கட்டிட பணிகள் நிறைவடைந்தது. இந்நிலையில், அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சென்னையில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.இதையடுத்து கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன்முத்துராமலிங்கம் (பொறுப்பு) கல்லூரி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி  வைத்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

அவிநாசி கலை அறிவியல்   கல்லூரி முதல்வர் (பொறுப்பு)  குலசேகரன் வரவேற்றார். பொதுப்பணித்துறை கோவை கோட்டை உதவி பொறியாளர் ஜெயக்குமார்  முன்னிலை வகித்தார். விழாவில், கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் குலசேகரன் கூறுகையில்: உயர்கல்வித் துறையின் மூலம், அவிநாசியில் இந்த கலைக்கல்லூரி 2017ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக 8.17 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து, ரூ.7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று தளங்களை உடையதாக  புதிய கல்லூரி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லூரியில் ஆங்கிலம், பொருளாதாரம், வணிகவியல், சர்வதேச வணிகம், வேதியியல், கணினிஅறிவியல் பாடப் பிரிவுகள உள்ளன.  இந்த கல்வி ஆண்டில் மொத்தம் 808 மாணவ, மாணவியர்  சேர்க்கை நடைபெற்று நிறைவுற்றுள்ளது. வகுப்பறைகளில் போதுமான இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த புதிய கட்டிடத்தில் நாளை முதல்  அரசு கலைக்கலூரி செயல்படுகிறது. என்று கூறினார்.

Tags : Avinashi ,building ,College of Arts and Sciences ,
× RELATED சங்கரா கலை அறிவியல் கல்லூரியில்...