சென்னை புறநகர் பகுதிகளில் இலவச மின்சாரத்தில் நிலத்தடி நீர் திருட்டு: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவள்ளூர், ஜூன் 25: சென்னை புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டத்தில், ஆழ்துளை கிணறுகளில் ராட்சத மின்மோட்டார் பொருத்தி,  தினசரி நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகளில் தண்ணீரை உறிஞ்சி விற்பனை செய்யும் பணியில் பலர் ஈடுபட்டு உள்ளனர். இதனால், நிலத்தடிநீர் குறைந்து விவசாயம் பாதிக்கும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. பூந்தமல்லி அருகே உள்ளது திருமழிசை பேரூராட்சி, நேமம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், இருமருங்கிலும் உள்ள விவசாய நிலங்களில் இருந்து செங்கல் சேம்பர்களுக்கு மண் சுரண்டப்படுகின்றன.

மேலும், திருமழிசை, கீழ்மணம்பேடு, நேமம் உட்பட பல கிராமங்களில், தனியார் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, இலவச மின்சாரம் பெற்று, ராட்சத மின் மோட்டார்கள் மூலம் நிலத்தடி தண்ணீரை உறிஞ்சி 100 முதல் 200 டேங்கர் லாரிகளில்  நிரப்பப்பட்டு, ஒவ்வொரு டேங்கர் தண்ணீரும் ரூ. 3,000க்கு மேல் சென்னை நகருக்குள் விற்கப்படுகின்றன. இதுவும், அனுமதியின்றி நடைபெற்று வருவதால், நிலத்தடிநீர் முற்றிலும் குறைந்து இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் பயிரிட முடியாத அவலம் ஏற்பட்டு உள்ளது. இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் கடும் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர் கிராமத்திலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக ராட்சத மின் மோட்டார்கள் மூலம், சென்னை குடிநீர் வாரியம் நிலத்தடி நீரை எடுத்து சென்னைக்கு அனுப்பப்படுகிறது.

இந்த கிராமத்தில் நிலத்தடி நீரை நம்பியே நெல், நிலக்கடலை விவசாயம் நடந்து வந்தது. ஏற்கனவே ஆறுகள் மற்றும் ஏரிகளில் நடைபெற்ற மணல் கொள்ளையால், 1990க்குப் பிறகு நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்ததால் 60க்கும் மேற்பட்ட கிணறுகள் பாழடைந்து போயிருக்கின்றன. 1980ல் 50 முதல் 80 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்ட 280 கிணறுகளில் இருந்து நீர் எடுக்கப்பட்டு வந்தது. இப்போது 200 முதல் 260 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட 220 கிணறுகள் செயல்படுகின்றன. கிராமத்தின் விவசாயம் முழுமையாக செயலிழந்துள்ளது. எனவே, நேமம், திருமழிசை, கீழ்மணம்பேடு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், நிலத்தடிநீரை உறிஞ்சி டேங்கர் லாரிகளில் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : suburbs ,Chennai ,
× RELATED மின்சாரம் தாக்கி வாலிபர் பலி