×

குப்பைகளை பிரிக்கும் போது காற்றில் பறந்து வந்து குடியிருப்புகளை சூழும் பிளாஸ்டிக் கழிவுகள்

காங்கயம், ஜூன் 25: காங்கயம் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் இருக்கும் குப்பைகளை இயந்திரத்தின் மூலம் பிரிக்கும்போது, பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து சென்று குடியிருப்புகளை அசுத்தம் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். காங்கயம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு, காங்கயம் சென்னிமலை சாலையில்  அமைந்துள்ளது. கடந்த  45 வருடங்களாக நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் இங்கு தான் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான டன் குப்பைகள் இங்கு மலை போல குவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த குப்பை கிடங்கில்  உள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக  சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு இந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டு தற்போது பெரிய இயந்திரங்கள் மூலம் கடந்த ஒரு மாத காலமாக குப்பைகளை அள்ளி பிரித்தெடுக்கும் பணி  நடந்து வருகிறது. இந்த பனியின் போது  குப்பைகள்  குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் காற்றில் பறந்து சென்று சாலையில்வாகனங்களில் செல்வோர் மற்றும் நடந்து  செல்வோர் மீதும், அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் குவிந்து விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். தற்போது கோடை காற்று பலமாக வீசுவதால் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் பறந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம் காற்று அதிக அளவில் வீசும்போது பணியை  நிறுத்தவேண்டும். அல்லது தடுப்புகள் அமைத்து பிளாஸ்டிக் கழிவுகள்  வெளியே செல்லாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்