250ல் இருந்து 150 ஏக்கராக சுருங்கிய கச்சூர் நாட்டேரி ஏரி: ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை, ஜூன் 25:  ஊத்துக்கோட்டை அருகே 250 ஏக்கரில் இருந்து 150 ஏக்கராக சுருங்கிய கச்சூர் நாட்டேரி ஏரி ஆக்கிரமிப்பை அகற்றவும், தூர்வாரி கரைகளை பலப்படுத்தி மழைநீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே கச்சூர்  ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுமார் 250  ஏக்கர் பரப்பளவு கொண்ட நாட்டேரி எரி உள்ளது.  இந்த ஏரிநீரை இப்பகுதி மக்கள் குடிநீருக்காகவும்,  வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கும் பயன்படுத்தி வந்தனர்.
இந்த ஏரியில் தண்ணீர் தேக்கி வைத்தால் சுற்றுப்புற கிராமங்களான பெரிஞ்சேரி, போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 700 ஏக்கர் நிலம் பயனடையும்.

தற்போது இந்த ஏரி நீரின்றி வறண்டு புதர்கள் மண்டி செடி, கொடிகள் படர்ந்துள்ளது. மேலும் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை சிலர் 100 ஏக்கர் அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். தற்போது 150 ஏக்கர் மட்டுமே உள்ளது. மேலும்,  மழை காலம் வருவதற்குள் இந்த ஏரியை தூர் வாரி கரைகளை பலப்படுத்தவும், மழை நீரை சேமிக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது : கச்சூர், பெரிஞ்சேரி கிராமங்களை ஒட்டியுள்ள நாட்டேரி ஏரி 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது.  இந்த ஏரிக்கு சுற்றுப்புற பகுதிகளிலிருக்கும் மலைப்பகுதிகளிலிருந்து மழை காலங்களில் வரும் மழை நீர் இந்த ஏரியில் தேக்கி வைத்து கச்சூர், பெரிஞ்சேரி,

போந்தவாக்கம், மாம்பாக்கம், பேரிட்டிவாக்கம்  உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 700 ஏக்கர் நிலங்களுக்கு இந்த ஏரி தண்ணீர் கிடைக்கும். இதனால் 3 போகம் பயிர் செய்வோம். தற்போது தனி நபர்கள் சிலர் ஏரியை ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளார்கள். இதனால் 250 ஏக்கர் கொண்ட ஏரி தற்போது, 150 ஏக்கருக்கும் குறைவாக ஏரியின் பரப்பளவு குறைந்து போனது.  நீரின்றி வறண்டு காணப்படுவதால் ஏரி சமூக விரோதிகளிடம் சிக்கி வீட்டுமனைகளாகும் அபாயம் உள்ளது. எனவே, நாட்டேரி ஏரியை  ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து  மீட்க  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Kachur Naderi Lake ,
× RELATED ஊத்துக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி