×

ஊத்துக்கோட்டை அருகே வறட்சியால் கருகிய கரும்பு பயிர் : விவசாயிகள் வேதனை

ஊத்துக்கோட்டை, ஜூன் 25: ஊத்துக்கோட்டை அருகே போந்தவாக்கம், புதுச்சேரி ஆகிய கிராமங்களில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவ-மாணவிகள் என 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். நெல், கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் இந்த வருடம் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமானது. இதனையடுத்து, கத்திரி வெயில் முடிந்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் மழை வரும் என எதிர்பார்த்த விவசாயிகளுக்கு மழை இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியது. மேலும் நிலத்தடி நீர் மட்டம்  வெகுவாக குறைந்து விட்டது. இதனால்  குடிநீருக்காக கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அது மட்டுமல்லாமல் ஏரி மற்றும் குளங்கள் வறண்டு விட்டது. பொதுமக்கள் குடிநீருக்காக வயல்வெளிகளை நாடி செல்கிறார்கள். இந்நிலையில் ஊத்துக்கோட்டை அருகே புதுச்சேரி கிராமத்தில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பை பயிரிட்டிருந்தனர். இதையடுத்து, நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கரும்பு பயிர்கள் கருகி வைக்கோல் போல காய்ந்து விட்டது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: மழை பொய்த்துப்போனதால் விவசாய நிலங்களில் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து விட்டது.  கரும்பு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் காய்ந்து கருகிவிட்டது. மேலும் தண்ணீரின் அளவு 60 அடிக்கு கீழே குறைந்து விட்டதால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து விட்டது. நூறு அடிக்கு மேல் போர் போட்டால் தான் தண்ணீர் கிடைக்கிறது என்று வேதனையுடன் தெரிவித்தனர். 

Tags : sugarcane crop ,Uthukottai ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசு...