×

திருவள்ளூர் பஸ்டெப்போ அருகே பஸ் நிறுத்த நிழற்குடையான மரத்தடி: மாணவிகள் வேதனை

திருவள்ளூர், ஜூன் 25: திருவள்ளூர் அரசு பஸ் டெப்போ அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லாததால், மரத்தடியில் நின்றுகொண்டு, பஸ் வரும்போது ஆபத்தான முறையில் ஓடிவந்து பயணிகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் ஏறுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு பஸ்நிறுத்த பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் அரசு பஸ் டெப்போ பஸ் நிறுத்தத்தில், ரயிலடி, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நின்று செல்கிறது. இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால், கடும் வெயிலில் நின்று பயணிகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் பஸ் ஏறிச்செல்கின்றனர். இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.

இந்த வழியாக ஷேர் ஆட்டோக்களும் செல்வதால், பஸ் நிறுத்தம் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். ஆனால் அங்கு நிழற்குடை இல்லாததால், பொதுமக்கள் வெயிலிலும் மழையிலும் அவதிப்படுகின்றனர். இதனால், சாலையோரம் உள்ள மரத்தடி மற்றும் கடைகளின் அருகே சென்று, அதன் நிழலில், பயணிகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் நின்றுகொண்டு, பஸ் வரும்போது ஆபத்தான முறையில் ஓடிவந்து ஏறுகின்றனர். இதனால், அங்கு விபத்துகள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே அங்கிருந்த பயணிகள் நிழற்குடையை, சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றிவிட்டனர். அதன்பின்னர் அங்கு புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை. எனவே, திருவள்ளூர் பஸ் டெப்போ அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Bus stop ,Thiruvallur bustepo ,
× RELATED ஈரோட்டில் குறைந்த கட்டணத்தில் உடனடி...