சென்னை புறநகரில் தொடர் வழிப்பறி கொள்ளை 2 வாலிபர்கள் பிடிபட்டனர்: 20 சவரன், பைக் பறிமுதல்

ஊத்துக்கோட்டை, ஜூன் 25 :  திருவள்ளூர் அருகே அரண்வாயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், தனது மோட்டார் சைக்கிளை கடந்த 14ம் தேதி மணவாளநகர் பகுதியில் உள்ள ஒரு பைக் ஷோரூம் அருகில் நிறுத்தி விட்டு  நண்பரை பார்க்க சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இது குறித்து மணிகண்டன் மணவாளநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து 15ம் தேதி திருவள்ளூர் தனியார் பள்ளி அருகில் சாலை ஓரம் நடந்து சென்ற அஸ்வினி என்பவரின் கழுத்தில் கிடந்த 6 சவரன் செயின்,   இதே போல் ஈக்காடு பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம் 5 சவரன் செயினையும் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
 இதை தொடர்ந்து  பெரியபாளையம் அருகே உள்ள வெள்ளியூர் பகுதியில் சந்திரகலா என்பவர் உறவினர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சந்திரகலாவை கத்தியை காட்டி மிரட்டி அவரது கழுத்தில் இருந்த 9 சவரன் செயினை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கைள பிடிக்க திருவள்ளூர் எஸ்பி பொன்னி  குற்ற பிரிவு போலீசாருக்கு  உத்தரவிட்டார். அதன்படி ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் மேற்பார்வையில் வெங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் குற்றபிரிவு போலீஸ் ஏட்டுகள் பகதூர், லோகநாதன், செல்வராஜ் ஆகியோர் பைக்கில் சென்று பெண்களை குறி வைத்து வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.

அப்போது மணவாளநகரில் திருடிய பைக் மூலமாக வழிப்பறி செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது. அந்த பைக்கை அம்பத்தூர் பகுதியில்  பார்த்ததாக சிலர் வெங்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பைக்குடன் அம்பத்தூர் பகுதியில் சுற்றித் திரிந்த 2 நபர்களை போலீசார் சுற்றி வளைத்துப்  பிடித்தனர். விசாரணையில், பைக்கில் சென்று வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். மேலும், சென்னை முகப்பேர் கிழக்கு பகுதி ஜெ.ஜெ.நகரை சேர்ந்த சங்கர் என்ற சங்கர் பாய் (22) என்பதும், மற்றொருவர் ஆவடி அடுத்த திருமுல்லை வாயல் கணபதி நகரை சேர்ந்த சரவணன் (23)  என்பதும் இருவரும் மாமன், மைத்துனர் என்பதும் தெரிய வந்தது. மேலும் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 20 சவரன் தாலி சரடு மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : suburbs ,Chennai ,
× RELATED குடந்தையில் 2 வியாபாரிகளை தாக்கி வழிப்பறி முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்