×

மார்லிமந்து அணை நீர் அல்லிச்செடியால் மாசுபடும் அபாயம்

ஊட்டி, ஜூன் 25:  ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மார்லிமந்து அணையில் அல்லிச்செடிகள் ஆக்கிரமிக்க துவங்கியுள்ளதால், அணை நீர் மாசுப்படும் அபாயம் உள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக பார்சன்ஸ்வேலி, டைகர்ஹில், மார்லிமந்து, கோடப்பமந்து, தொட்டபேட்டா, கிளன்ராக், ஓல்டு ஊட்டி ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், பார்சன்ஸ்வேலி, டைகர்ஹில், மார்லிமந்து ஆகிய மூன்று அணைகள் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக பயன்பட்டு வருகிறது. மார்லிமந்து அணையில் இருந்து ஊட்டி தாவரவியல் பூங்கா குடியிருப்புகள், சேரிங்கிராஸ் மற்றும் அரசு மருத்துவமனை மற்றும் அதனை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.  இந்த அணை பல ஆண்டாக தூர்வாரப்படாமல் உள்ள நிலையில், அணையில் சேறும் சகதியும் நிறைந்து காணப்படுகிறது. அது மட்டுமின்றி, அணையில் தற்போது அல்லிச் செடிகள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், அணை நீர் மாசுப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணை முழுவதும் அல்லிச்செடி ஆக்கிரமித்தால், அதனை அகற்றுவதற்கும் சிரமம் ஏற்படும். மேலும், தண்ணீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் இந்த அணையில் உள்ள அல்லிச்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED தடுப்பு சுவரில் வாகனம் மோதி தொழிலாளி பலி