மேட்டுப்பாளையத்தில் புதிய கல்லூரி திறப்பு விழா நீலகிரி எம்.பி., ராசாவை அழைக்காததால் திமுகவினர் முற்றுகை போராட்டம்

மேட்டுப்பாளையம், ஜூன் 25:  மேட்டுப்பாளையத்தில்  ரூ.8 கோடியில் கட்டப்பட்ட அரசு கலைக்கல்லூரி திறப்பு விழாவுக்கு நீலகிரி எம்.பி., ஆ.ராசாவுக்கு முறைப்படி அழைப்பு விடுக்காததால், தி.மு.க வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
 கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தில்,  தமிழக அரசின் உத்தரவின் பேரில், மாதேஸ்வரன் மலை அடிவாரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு  ரூ. 8 கோடி செலவில் 6 ஏக்கர் பரப்பளவில் அரசு கலைக்கல்லூரி கட்டும் பணி  கடந்த 2018ம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது.  2019 ஜூலையில் முடிக்க திட்டமிடபட்டது. குறித்த காலத்திற்கு ஒரு மாதம் முன்பே கட்டிட பணிகள் நிறைவடைந்து நேற்று திறப்பு விழா நடந்தது.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளிகாட்சி மூலம் கல்லூரியை திறந்து வைத்தார். இந்த கல்லூரியில் மூன்று அடுக்கு தளங்கள் அமைக்கபட்டுள்ளன. வகுப்பறைகள், ஆய்வகங்கள், முதல்வர் அறை, துறைத்தலைவர்கள் அறை, மாணவர்கள் கூட்டுறவு கடை, சுகாதார அறை, நூலகம் என மொத்தம் 36 அறைகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.சட்டமன்ற உறுப்பினர் ஒ.கே சின்னராஜ், கல்லூரி முதல்வர் சொர்ணலதா ஆகியோர் கல்லூரி வளாகத்தில் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர். அப்போது, அங்கு வந்த தி.மு.க வினர் விழாவுக்கு நீலகிரி எம்.பி., ஆ.ராசாவுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பி முற்றுகையிட்டனர்.அ.தி.மு.க அரசு வேண்டுமென்றே மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட  பிரதிநிதிகளை  அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி கல்லூரி வளாகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அரசு விழாவில் தி.மு.க வினர் போராட்டம்  நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் சமரசம் செய்துவைத்தனர். இதையடுத்து, திமுகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Mettupalayam ,Nilgiris ,
× RELATED குடியுரிமை சட்டத்தை கண்டித்து...