உலக விதவை பெண்கள் தின பேரணி

உத்திரமேரூர், ஜூன் 25: உத்திரமேரூர் அருகே வாடாநல்லூரில் உள்ள ஒருங்கிணைந்த மேம்பாட்டு அறக்கட்டளை, வெளிச்சம் தனித்து வாழும் பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அசிசி நிறுவனத்துடன் இணைந்து உலக விதவை பெண்கள் தின விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. அசிசி நிறுவன தலைவர் ஸ்டெல்லா தலைமை தாங்கினார். ஐடிடி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயசெல்வி, தமிழ்செல்வி, திட்ட மேலாளர் சத்தியசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அசிசி திட்ட அலுவலர் சம்பத்குமார் வரவேற்றார். உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இருதயராணி கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். அம்பேத்கர் சிலை அருகே துவங்கிய பேரணி பஜார் வீதி, சன்னதி தெரு உள்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது.

இதில் விதவை பெண்களை ஒதுக்கி வைக்கக் கூடாது. மற்ற பெண்களை போன்று விதவை பெண்களையும் சமமாக மதிக்க வேண்டும். அரசு திட்டங்கள் அவர்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை வேண்டும். அரசு சார்பில் விதவைகளுக்கு வழங்கும் ஓய்வூதிய தொகை ₹1000ல் இருந்து ₹3000 என உயர்த்த வேண்டும். விதவைகள் தனித்து வாழும் பெண்களுக்கு தனி இயக்குநரகம் உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியிம், கோஷமிட்டும் சென்றனர். பேரணியின் முடிவில் விதவை பெண்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய 300 அஞ்சல் அட்டைகளை, தபால் மூலம் தமிழக முதல்வருக்கு அனுப்பினர்.

× RELATED சித்தாமூர் - செய்யூர் இடையே குண்டும் குழியுமான நெடுஞ்சாலை