×

நிர்வாக சீர்கேட்டால் தடுமாறும் அமராவதி சர்க்கரை ஆலை 3 மாதத்தில் 23 நாள் அரவை நிறுத்தம்

உடுமலை,ஜூன்25:உடுமலை அருகே உள்ள அமராவதி சர்க்கரை ஆலை அரவை துவங்கிய 3 மாதத்தில் 23 நாள் இயங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 தமிழகத்தில் 19 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் 11 தனியார் சர்க்கரை ஆலைகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையானது கரும்பு அரவையில் முதலிடம் வகித்தது. இந்நிலையில் தற்போது நிர்வாக சீர்கேட்டால் ஆலையில் கரும்பு அரவை குறைந்து வருகிறது. கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வரும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு விநியோகிப்பதற்காக  விவசாயிகள் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் இந்த ஆண்டு கரும்பு பயிரிட்டிருந்தனர்.  2018-19ம் நிதி ஆண்டிற்கான கரும்பு அரவை கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி துவங்கியது. இதுவரை ஆலை அரவை துவங்கிய 87 நாளில் 23 நாட்கள் அரவை நடைபெறவில்லை. இயந்திர கோளாறு, எரிபொருள் தட்டுப்பாடு, தண்ணீர் பற்றாக்குறை, உதிரிபாகங்கள் வாங்குவதற்கு போதிய நிதி இல்லாதது போன்ற நிர்வாக சீர்கேடு காரணமாக ஆலையானது 23 நாட்கள் இயங்கவில்லை. ஆலை இயங்காதால் விவசாயிகளுக்கு கரும்பு வெட்டுவதற்கான உத்தரவாதம் வழங்கப்படவில்லை. அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள கரும்புகள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

 இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில்: நாள்ஒன்றுக்கு 1500 டன் வரை கரும்புஅரவை செய்து வந்த சர்க்கரை ஆலை கடந்த 23 நாட்களாக இயங்கவில்லை. தற்போது வரை 73ஆயிரம் டன் கரும்பு மட்டுமே அரவை செய்யப்பட்டுள்ளது. ஆலை இயங்காததால் 65 ஆயிரம் டன் கரும்பினை அரவை செய்ய முடியாமல் போனது. இதனால் அறுவடைக்கு தயார்நிலையில் உள்ள கரும்புகள் காய்ந்து வருவதோடு, வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து கூலிக்கு கரும்பு வெட்ட வந்த தொழிலாளர்களும் வேலைஇழந்துள்ளனர். இந்த ஆண்டு 1.75 லட்சம் டன் கரும்பு அரவைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ஆலையில் இயந்திரங்கள் கோளாறு,எரிபொருள் இல்லை,தண்ணீர்இல்லை, பழுது பட்ட இயந்திரங்களுக்கான உதிரி பாகங்கள் வாங்க பணம் இல்லை என அடுக்கடுக்கான காரணங்கள் மட்டுமே கூறப்படுகிறது.விவசாயிகளின் வேதனை குறித்து அதிகாரிகளுக்கோ,அரசுக்கோ தெரிவதில்லை என தெரிவித்தனர்.
 இந்நிலையில் நேற்று அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை திருமண மண்டபத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் வீரப்பன், துணை தலைவர் பாலதண்டபானி, மடத்துக்குளம் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ சண்முகவேலு,ஆலை மேலாண்மை இயக்குனர் மற்றும் அதிகாரிகள், மேலாண்மை குழு தலைவர் சின்னப்பன் துணை தலைவர் முத்துராமலிங்கம் மற்றும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகளும் பங்கேற்றனர்.

 கூட்டம் துவங்கியது முதல் கரும்பு விவசாயிகள் அதிகாரிகளுடன் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 11 பாயிண்ட் பிழிதிறன் கொண்ட ஆலை தற்போது 7.54 பாயிண்டாக குறைந்து விட்டது. அரவை இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பழுதான உதிரிபாகங்கள் வாங்குவதில்லை. அறுவடை செய்த 15 நாட்களில் வழங்கப்பட்டு வந்த கரும்புக்கான பணம் தற்போது 22 நாட்களாகியும் கிடைப்பதில்லை. கரும்பு வெட்டுவதற்கான உத்திரவாதம் அளிக்காத காரணத்தால் காட்டில் கரும்பு காய்ந்து விவசாயிகளுக்கான எங்களுக்கு பெரும் நஷ்டமாகிறது. என விவசாயிகள் ஆவேசத்துடன் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து கூட்டத்தில் முறையாக ஆலையை இயக்க வேண்டும், உரிய நேரத்தில் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். உரிய நேரத்தில் விளைவித்த கரும்பு முழுமையையும் காயாமல் அறுவடை செய்ய உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஆலையை புனரமைத்து முழு கொள்ளளவான தினமும் 1500 டன் அரவை திறனை உறுதி செய்ய வேண்டும். ஆலை பணிபுரிவதற்கு தேவையான பொறியாளர்கள்,பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Amaravathi Sugar Plant ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி...