×

போதிய கட்டமைப்பு இல்லாததால் ரேலியா அணை நீர் முறையாக விநியோகம் செய்ய முடிவதில்லை

குன்னூர், ஜூன் 25: குன்னூரில் நீர் நிலை, மின்சார வசதி மற்றும் சாலை வசதி குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.  தமிழகத்தில் நிலவி வரும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவின் பேரில், மாவட்டங்களில் தண்ணீர், மின்சார வசதி மற்றும் சாலை வசதி குறித்து ஆய்வு சிறப்பு அதிகாரிகள் மூலம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தொழிற்துறை துணை தலைவர் நீரஜ் மிட்டல் நீலகிரி மாவட்ட  கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பு அதிகாரிகள் மாவட்டத்தின் பழங்குடியின கிராமங்கள் மற்றும் கூடலூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. நேற்று குன்னூர்  பகுதியில் உள்ள நீர் ஆதாரங்களான ரேலியா அணை, ஜிம்கானா உள்ளிட்ட பகுதியில் ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முன்னிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை  கூட்டம் நடத்தப்பட்டது.
 
 இதையடுத்து, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது: மாவட்டத்தில் நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். குன்னூரில் உள்ள ரேலியா அணையில் போதுமான தண்ணீர் இருந்தும் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக குடிநீர் விநியோகம் செய்ய போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது ஆகும். நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் குன்னூர் பகுதியில் 42 லட்சம் மதிப்பில் குழாய்கள் அமைக்கப்படும் மேலும் புதிய தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.  இதை தொடர்ந்து கண்காணிப்பு அலுவலர்  நீரஜ் மிட்டல் கூறியதாவது: மற்ற மாவட்டங்களை பொருத்தவரை நீலகிரி மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு குறைவாகவே உள்ளது. தண்ணீரின் தன்மை குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடக்க உள்ளது. பொதுமக்கள் மழைநீரை சேகரிக்க முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு தண்ணீர் குறித்த விழிப்புணர்வு வழங்கப்படும் என்றார்.   இந்நிகழ்ச்சியில் வருவாய்துறை அதிகாரி செல்வராஜ் மற்றும் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் கலந்து கொண்டனர்.

Tags : Reelia Dam ,
× RELATED ரேலியா அணை நிரம்பியும் பயனில்லை 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம்