எட்டு வழிச்சாலைக்கு எதிராக 5 மாவட்ட விவசாயிகள் ஆலோசனை கூட்டம்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம்

உத்திரமேரூர், ஜூன் 25: சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு எதிராக, 5 மாவட்ட விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்கள் ஆற்றங்கரையோரம் உள்ளன. இதனால் இங்குள்ள கிராம மக்களின் வாழ்வாதாரமாக விவசாயம் மட்டுமே உள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து ₹10 ஆயிரம் கோடி மதிப்பில் சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை வழிச்சாலை அமைக்க திட்டமிட்டது. இந்த எட்டு வழிச் சாலை சென்னையில் இருந்து சேலம் வரை 274 கிமீ தூரத்தை 3 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டது.
இந்த திட்டத்தால் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் மட்டும் சீத்தனஞ்சேரி, சாத்தனஞ்சேரி, மலையாங்குளம், புத்தளி, புலிவாய், மணல்மேடு, கருவேப்பம்பூண்டி, ஒழுகரை, சிலாம்பாக்கம், வெங்காரம், அனுமந்தண்டலம், மானாம்பதி, பெருநகர் உட்பட 20 கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன.

இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள், ஆயிரத்துக்கு மேற்பட்ட விவசாய கிணறுகள், 5000க்கும் மேற்பட்ட வீடுகள், கண்மாய், ஏரி, கால்வாய் என நீர்நிலைகள் மட்டுமின்றி வனப்பகுதிகள்  பாதிப்படைக்கின்றன.  இதனால் கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டத்துக்காக, நிலத்தினை அளவீடு செய்ய காவல்துறையின் துணையோடு, அரசு அதிகாரிகள் வந்தனர். அப்போது விவசாயிகள் தங்களது விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான அடக்கு முறைகளை தமிழக அரசு மேற்கொண்டது. ஆனாலும், இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து இந்த எட்டு வழிச்சாலைக்கு தடைவிதிக்கக் கோரி விவசாயிகள் உட்பட தன்னார்வலர்கள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வெளியானது. இதில் நிலம் கையகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போட்ட நில கையகப்படுத்தும் அறிவிப்பாணை செல்லாது என்றும், உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. இதற்கு, தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்நிலையில் உத்திரமேரூர் அடுத்த அனுமந்தண்டலம் கிராமத்தில் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் எட்டு வழிச்சாலையால் பாதிக்கப்படும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளை ஒன்றிணைத்து, அவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இயக்க நிர்வாகிகள் அருள், சௌந்தர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் எட்டு வழிச்சாலைக்கு விவசாயிகள் யாரும் தங்களது நிலத்தை தர மாட்டோம், இந்த எட்டு வழிச்சாலைக்கு அரசு செய்துள்ள மேல்முறையீட்டை நீதிமன்றம் வாயிலாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் கோஷமிட்டனர்.

Tags : District Farmers' Advisory Meeting Against Eight Roads: Decision Against Central And ,State Governments ,
× RELATED ரோபோ மூலம் கழிவுகளை அகற்ற வலியுறுத்தி...