×

அரசூர் கிராமத்தின் தரைப்பாலத்தில் மெகா பள்ளம் பொதுமக்கள் கடும் பீதி: விபத்தை சந்திக்கும் வாகன ஓட்டிகள்

செய்யூர், ஜூன் 25: சித்தாமூர் ஒன்றியம் அரசூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம், கடும் சேதமடைந்து சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர். சித்தாமூர் ஒன்றியம் அரசூர் ஊராட்சியில், அரசூர் கிராமத்துக்கு செல்லும் சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இந்த கால்வாயை கடந்து செல்வதற்காக, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், தரைப்பாலத்தை அமைப்பதற்காக டெண்டர் எடுத்தவர்கள், தரமில்லாமல் அமைத்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், அந்த தரைப்பாலம் கடந்த சில மாதங்களுக்கு முன், திடீரென சரிந்து விழுந்தது. இதையொட்டி, சாலையின் குறுக்கே பள்ளமும் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளம் நாளுக்கு நாள் விரிவடைந்து, தற்போது 5அடி அகலம், 5அடி ஆழம் கொண்டு அபாயகரமான மெகா பள்ளமாக மாறிவிட்டது.

இந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, புதிய தரைப்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் அதற்கான, எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. இரவு நேரங்களில் பைக்கில் வருவோர், பள்ளத்தை கவனிக்கால், அதில் விழுந்து படுகாயமடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதனால், சேதமடைந்துள்ள இந்த தரைப்பாலத்தால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து சென்று வருகின்றனர். எனவே பெரும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சேதமடைந்துள்ள தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிய தரைப்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டெண்டர் எடுக்கும் நிறுவனம் தரமானதாக அமைக்கிறதா என்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : public ,accident ,motorists ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...