×

ஓஎம்ஆரில் முடங்கிய கட்டுமான பணிகள்: தண்ணீர் பற்றாக்குறையால் வேலை இழந்த தொழிலாளர்கள்

திருப்போரூர், ஜூன்  25: ஓஎம்ஆரில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில், தண்ணீர் பற்றாக்குறையால் கட்டுமான பணிகள் முடங்கிவிட்டன. இதனால், தொழிலாளர்கள் வேலையை இழந்து தவிக்கின்றனர். சென்னை கந்தன்சாவடியில் தொடங்கி கேளம்பாக்கம் வரை தகவல் தொழில் நுட்ப நெடுஞ்சாலை எனப்படும் பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது. இங்கு, அதிக விலை உயர்வால் வீட்டுமனை விற்பனை மந்தமாகி ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் நீச்சல்குளம், ஜிம், ஷாப்பிங் மால், பள்ளிக் கூடம், விளையாட்டு அரங்கங்கள் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டன. இதனால் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உள்பட உயர் வருவாய் பிரிவினர் இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க போட்டி போட்டனர். இதைெயாட்டி, கடந்த 2005 முதல் 2019 வரை 15 ஆண்டுகளில் மட்டும் சுமார் 6 லட்சத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உருவாகிவிட்டன.

தற்போது வரை ராஜிவ் காந்தி சாலையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. பல அடுக்குமாடி குடியிருப்புகளில் பாதியளவுக்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சிலவற்றில் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஆனால் விற்பனை மந்தம், கட்டுமான பொருட்களின் விலையேற்றம், மணல் தட்டுப்பாடு, தொழிலாளர் பற்றாக்குறை உள்பட பல காரணங்களால், அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. மேலும், தற்போது நிலவும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, கட்டுமான பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில், ஒரு டேங்கர் லாரியின் தண்ணீர் முதலில் ரூ1500க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் 42 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ4500 முதல் ரூ6000 வரை அந்தந்த தூரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், கட்டுமான செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதால், பல நிறுவனங்கள் வேலையை நிறுத்தி விட்டன. இந்த தொழிலை நம்பிவந்த பல்வேறு, வடமாநில தொழிலாளர்கள் தங்களின் குடியிருப்புகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வந்ததால், ஒரு அளவுக்கு மேல் கடன் வாங்க முடியாததாலும், தாங்கள் தங்கியுள் குடியிருப்பு பகுதிக்கே தண்ணீர் வராமல் போனதாலும், வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்களது ஊருக்கே திரும்பி விட்டனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள், முற்றிலும் முடங்கிவிட்டது. தமிழக அரசும், உள்ளாட்சி நிர்வாகங்களும் தற்போதுள்ள நிலையில் குடிநீர் பிரச்னையை மட்டும் தீர்த்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் தீவிரமாக இருப்பதால், பல அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதை கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக ஏற்கனவே பத்திரப்பதிவு செய்து மாதாந்திர தவணை தொகை கட்டி வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் வீடுகளில் குடியேறுவதற்கு மேலும் 4 முதல் 6 மாதங்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : OMR ,
× RELATED என்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால்...