கட்டுமான பணிக்கு தண்ணீர் திருட்டு

கோவை, ஜூன் 25: கோவை அரசு மருத்துமனையில் கட்டிடம் கட்ட மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் திருடியதால், போதிய தண்ணீர் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டனர். கோவை அரசு மருத்துவமனையின் புதிய மற்றும் பழைய கட்டிடங்களை பொதுப்பணித்துறையினர் பராமரித்து வருகின்றனர். மேலும், மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு கட்டுமான பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இதன் காரணமாக நோயாளிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில், மருத்துவமனையின் மகப்பேறு இயல்துறையில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வார்டுகளில் தண்ணீர் வரவில்லை. இதனால், சிகிச்சை பெற்று வந்த குழந்தைகள், கர்ப்பிணிகள் கடும் அவதிப்பட்டனர்.  இந்நிலையில், நோயாளிகளின் உறவினர்கள் சிலர் தண்ணீர் தொட்டியின் அருகே சென்றுள்ளனர்.

அப்போது, வார்டுகளுக்கு செல்லும் வால்வு அடைக்கப்பட்டு இருந்ததை கண்டனர். மேலும், மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் எடுக்கப்பட்டது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதிகாரிகள் ஆய்வு செய்ததில் பொதுப்பணித்துறையினர் மோட்டர் பயன்படுத்தி கட்டிடம் கட்ட தண்ணீர் எடுத்து வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த மோட்டார் அகற்றப்பட்டது. இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என பொதுப்பணித்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது. அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், குடிநீரை கட்டிடம் கட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மோட்டார் பயன்படுத்தி தண்ணரை திருடியது நோயாளிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED டால்பின் முனைக்கு செல்ல அனுமதி