×

உள்ளாட்சி தேர்தலை அரசியல் குறுக்கீடு இல்லாமல் நடத்த வேண்டும்

ஈரோடு, ஜூன் 25: தமிழ்நாடு  விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில்  நடந்தது. இதில்      கூட்டமைப்பின் செயலாளர்  நல்லசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகளின்  தலையீடும், குறுக்கீடும் இல்லாமல் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த  வேண்டும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி வரையிலான 70 கி.மீட்டர்  தொலைவிற்கு ஆற்றின் இருபகுதிகளிலும் பல கூட்டுக்குடிநீர் திட்டங்கள்  உள்ளது.கூடுதலாக பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டப்பணியும் நடந்து வருகிறது. இவை அனைத்திற்கும் ஆற்றோரம் குழாய் பதித்து குடிநீர்  கொடுக்கும்போது விநாடிக்கு 25 கனஅடி என்ற அளவில் தண்ணீர் எடுத்தால்  போதுமானதாக இருக்கும். தற்போது குடிநீர் என்ற பெயரில் விநாடிக்கு 200 கனஅடி  வீதம், அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 176 கனஅடி  முறைகேடாக ஆலை பயன்பாட்டிற்கும், அனுமதியற்ற பாசனங்களுக்கும் சட்டத்திற்கு  புறம்பாக கொண்டு செல்லப்படுகிறது.

பவானிசாகரில் இருந்து குழாய் பதித்து  நேரடியாக குடிநீர் வழங்கினால் மட்டுமே இந்த முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி  வைக்க முடியும். மேலும் இதற்கு மின்சார தேவையும் இருக்காது. இதை அரசு  பரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழ்நாடு இயற்கை வாழ்வுரிமை இயக்க  அமைப்பாளர் பொடாரன், தமிழ்நாடு கள் இயக்க அமைப்பாளர்கள் கதிரேசன், சிப்பி  முத்துரத்தினம், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Tags : elections ,
× RELATED திருச்சி, ராமநாதபுரம் நாடாளுமன்ற...