மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவு பரிந்துரைக்கு 3 மாத கால நீட்டிப்பு தேவை

ஈரோடு, ஜூன் 25: பல்கலை கழக ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பசுபதி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை 2019 வரைவு பரிந்துரைகள் குறித்து மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு உத்தேசிக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவை ஜூலை மாதத்தில் இருந்து மேலும் 3 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கால நீட்டிப்பு வழங்கினால் தான் கல்வியாளர்கள், கல்வி சார்நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கூடிப்பேசி அறிவார்ந்த தங்கள் கருத்துகளை சமர்ப்பிக்க ஏதுவாக அமையும். மேலும் அவசர, அவசரமாக கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகள் மீது கருத்துகள் கோருவதும், செயல்படுவதும் கூடாது. இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர், மாணவர் அமைப்புகள் இந்த அறிக்கை மீது விரிவான விவாதம் நடத்தி அந்த விவாதங்களில் திரண்ட கருத்தை சமர்ப்பிக்க போதிய கால அவகாசம் வழங்க வேண்டும்.  கட்டாய நன்கொடை வசூல் தடை சட்டம் 1992ல் இயற்றப்பட்டு 27 ஆண்டுகள் ஆனபின்னரும் தமிழகத்தில் மாணவர் சேர்க்கையின்போது கட்டாய நன்கொடை வசூலிப்பது தொடர்கதையாக உள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு கட்டாய நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு உயர்கல்வி ஆணையம் செயலற்ற நிலையில் உள்ளது. உயர்கல்வி ஆணைய சட்டப்பிரிவுகளில் திருத்தம் கொண்டு வந்து ஆசிரியர் பிரதிநிதிகளுக்கு இடம அளிக்க வழிவகை செய்ய வேண்டும். சேலம் பெரியார் பல்கலை கழகத்தில் துணைவேந்தர் பாரபட்சமாக பல்கலை கழக விதிகளுக்கு முரணாக பணி நியமனம் செய்வதும், பணி உயர்வு அளிப்பதுமாக அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருபவர்களை பணிநிரந்தரம் செய்ய மறுக்கிறார். துணைவேந்தர் பணியில் சேர்ந்த நாள் முதல் இன்றுவரை பதவி உயர்வு அளிக்கப்பட்ட நபர்கள் தொடர்பாகவும், பணி நியமனம் தொடர்பாகவு–்ம் உள்ள கோப்புகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெரியார் பல்கலை கழக செனட் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பல்கலை கழக துணைவேந்தருக்கு உத்தரவிட வேண்டும், ஈரோடு சிக்கய்யநாயக்கர் கல்லூரியை உடனடியாக அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் பாலமுருகன், மாநில பொருளாளர் இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்கள், முன்னாள் மாநில தலைவர் சாந்தி, முன்னாள் பொதுச்செயலாளர் சேட்டு, முன்னாள் பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : government ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை