×

பாவூர்சத்திரம் அருகே எல்லைப்புளியில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் மக்கள்

பாவூர்சத்திரம், ஜூன் 25:  பாவூர்சத்திரம் அருகே அடிப்படை வசதிகள் இல்லாததால் எல்லைப்புளி கிராம மக்கள் கடுமையாக தவித்து வருகின்றனர். கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் அரியப்புரம் ஊராட்சிக்குட்பட்ட கடையம் - தென்காசி சாலையில் திரவியநகர் அருகே  எல்லைப்புளி கிராமம் உள்ளது. இங்குள்ள நெடுந்தெரு, நடுத்தெரு, வடக்குத்தெரு, தெற்குத்தெரு ஆகிய 4 தெருக்களில் சுமார் 45 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலானோர் விவசாய கூலி தொழிலாளர்கள். இக்கிராமத்தில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. சாலை, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். எல்லைப்புளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 2.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளைப்பனையேறிபட்டி மற்றும் திரவியநகர் பள்ளிக்கு பஸ் வசதியின்றி நடந்துதான் சென்று வருகின்றனர்.

குண்டும், குழியுமான மண் சாலையால் மழை நேரங்களில் சேறும், சகதியுமாக அவதிப்படுகின்றனர். மேலும் ஆங்காங்கே முட்செடிகள் ஆக்கிரமித்தும் காணப்படுகின்றன. தெருக்களில் கழிவுநீர் வாறுகால் இல்லாததால், வீட்டு முன்பு கழிவுநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மின்கம்பங்கள் இருந்தும் தெரு விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாடவே அஞ்சுகின்றனர். வாரத்திற்கு ஒருமுறை 45 நிமிடம் மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இங்கு நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இப்பகுதி மக்கள், தென்காசி - கடையம் சாலை எல்லைப்புளி விலக்கு மற்றும் திரவியநகரில் உள்ள தாமிரபரணி வால்வில் விழும் குறைந்தளவு நீரை பிடிப்பதற்காக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

இப்பகுதியில் ஓராண்டு முன்பு 300 அடிக்கு போர் போட்டும் தண்ணீர் வராததால், அதுவும் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எல்லைப்புளி கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர அரியப்புரம் ஊராட்சியில் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை நடவடிக்ைக எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது நடவடிக்ைக மேற்கொண்டு எங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென கோரிக்கையும் விடுத்து உள்ளனர்.

Tags : border ,facilities ,Paavarupadram ,
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில்...