×

சங்கரன்கோவில் இளம்பெண் கொலையில் திருப்பம் நடத்தை சந்தேகத்தில் மனைவியை குத்திக்கொன்றேன் கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

சங்கரன்கோவில், ஜூன் 25:   சங்கரன்கோவில் காமராஜர் புது கீழ 1வது தெருவை சேர்ந்தவர் கோமதிநாயகம் (40), கொத்தனார். இவரது மனைவி முத்துமாரி (33). இவர்களுக்கு பூபதி, சஞ்சய் என 2 மகன்களும், முகிலேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். கடந்த 20ம் தேதி மதியம் வீட்டில் தனியாக இருந்த முத்துமாரி, உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை மாவட்ட எஸ்பி அருண்சக்திகுமார் பார்வையிட்டார். போலீஸ் துப்பறியும் நாயும், தடயவியல் நிபுணர்களும் வந்து ஆய்வு செய்தனர். மோப்பநாய் தெருக்களை சுற்றி வந்து விட்டு மீண்டும் சம்பவம் நடந்த வீட்டில் வந்து படுத்துவிட்டது.  இதனால் முத்துமாரி வீட்டில் தனியாக இருந்தபோது யாராவது தெரிந்த நபர் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு, எதிர்ப்பின் காரணமாக ஆத்திரத்தில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது.

இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  முத்துமாரி செல்போன் எண்ணில் பேசிய 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்தது.  முத்துமாரி தந்தை சங்கரலிங்கம் (55) அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார், சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் கோமதிநாயகத்திடம் விசாரித்தனர். அவரது பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால், கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். முதலில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு, பின்னர் மனைவி கொலை பற்றி எதுவும் தெரியாது என பல்டி அடித்துள்ளார்.  கடந்த 5 நாட்களாக விசாரணை தொடர்ந்த நிலையில், மனைவியை குத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: எனது மனைவி முத்துமாரி அடிக்கடி செல்போனில் பேஸ்புக் பார்ப்பார். இதனால் எனக்கு சந்தேகம் எழுந்தது. அவரது நடத்தை சந்தேகம் காரணமாகவே குத்திக் கொலை செய்தேன். இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ரத்தக்கறை படிந்த சட்டையை கோமதிநாயகம் வீட்டில் இருந்து கைப்பற்றிய போலீசார், அவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கோமதிநாயகத்தை கைது செய்த போலீசார், நேற்று சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குற்றவியல் நீதிபதி (பொறுப்பு) விஜயலட்சுமி, கோமதிநாயகத்தை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர், பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.


Tags :
× RELATED ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் பெண் தற்கொலை