விவசாயிக்கு அரிவாள் வெட்டு

சிவகிரி, ஜூன் 25:   சிவகிரி குமாரபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (45). விவசாயியான இவருக்கு, ஊருக்கு மேற்கே உள்ள வழிவழிக்குளம் பாசன பகுதியில் கிணற்றுடன் கூடிய வயல் உள்ளது. சிவகிரி கட்டபொம்மன் தெருவை சேர்ந்த கட்டபொம்மன் (46), இங்குள்ள சக்கம்மாள் கோயிலில் பூசாரியாக உள்ளார். மேலும் நாச்சியார் அறக்கட்டளைக்கு சொந்தமான பண்ணை வயலை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது வயலுக்கு முனியாண்டி கிணற்றில் இருந்து வாடகை அடிப்படையில் தண்ணீர் பாய்ச்சி வந்துள்ளார். இவ்வாறு தண்ணீர் பாய்ச்சிய வகையில் முனியாண்டிக்கு கட்டபொம்மன் ரூ.900 வாடகை பாக்கி வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வாடகை பாக்கி காரணமாக முனியாண்டி தண்ணீர் தர மறுத்ததால் கட்டபொம்மனுக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கட்டபொம்மன் அரிவாளால் முனியாண்டியை வலது கை தோள்பட்டையில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த முனியாண்டி, சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து சிவகிரி எஸ்ஐ துரைசிங்கம் வழக்கு பதிந்து தலைமறைவான கட்டபொம்மனை தேடி வருகிறார்.

Tags :
× RELATED விவசாயிக்கு அரிவாள் வெட்டு மர்ம நபர்களுக்கு வலை