×

போலீஸ் நிலையத்தில் பூ வியாபாரி தீக்குளிக்க முயற்சி வேலூரில் பரபரப்பு

வேலூர், ஜூன் 25: வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பூ வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் அரசமரப்பேட்டையை சேர்ந்தவர் அண்ணாமலை(52). இவர் பழைய பஸ் நிலையம் அருகே சாலையோரம் 20 ஆண்டுகளாக பூக்கடை வைத்திருந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்னையால் அண்ணாமலை வியாபாரம் செய்யவில்லையாம். இதனால், அந்த இடத்தில் கடந்த 5 ஆண்டுகளாக ஒரு பெண் பூக்கடை வைத்துள்ளார். இந்நிலையில், குடும்ப பிரச்னை முடிந்த பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய பஸ் நிலையம் அருகே சாலையோரம் பூக்கடை வைக்க அண்ணாமலை சென்றபோது, அங்கு கடை வைத்திருந்த பெண்ணுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அண்ணாமலை நேற்று முன்தினம் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளிக்க சென்றார். அங்கிருந்த போலீசார், புகார் கொடுக்க நாளை (நேற்று) வரும்படி சொன்னார்களாம். அதன்படி அண்ணாமலை நேற்று மதியம் 12.30 மணியளவில் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் சென்றார். அப்போது போலீசார், ‘இன்ஸ்பெக்டர் இல்லை. அவர் வரும் வரை இருங்கள்’ எனக்கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த அண்ணாமலை தான் கொண்டு வந்த கேனில் இருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்து கேனை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மாநகராட்சியிலும், வேலூர் வடக்கு போலீசிலும் ஏற்கனவே புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியடைந்த அண்ணாமலை தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Flower dealer ,police station ,
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...