ராணிப்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

ராணிப்பேட்டை, ஜூன் 25: ராணிப்பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த ரெண்டாடி அருகே கிருஷ்ணாவரம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு குறைந்த மின்அழுத்தம் காரணமாக சரிவர குடிநீர் சப்ளை செய்ய முடியவில்லையாம். புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைத்து தரக்கோரி மேல்பாடி மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கடந்த 2 மாதங்களாக சரிவர குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் நேற்று காலை ரெண்டாடி கூட்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வாலாஜா பிடிஓ சித்ரா, தாசில்தார் பூமா, சிப்காட் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கவும், குடிநீர் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் நாட்றம்பள்ளி அடுத்த அக்ராகரம் ஊராட்சியில் தற்போது கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதி மக்கள் தங்களின் குடிநீர் தேவைக்காக அதிகவிலை கொடுத்து டிராக்டர் மற்றும் சிறிய டேங்குகள் மூலம் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் வழங்கப்படும் குடிநீர் பிடித்துச் செல்ல அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் காலை முதல் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இப்படி நீண்ட நேரம் காத்திருப்பதால் அப்பகுதி மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே, குடிநீர் பிரச்னைக்கு ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Public Road ,Ranipet ,Galle Road ,
× RELATED ரயில் மறியல்; 100 பேர் கைது