குடியாத்தத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க மூடப்பட்ட கிணறுகளை மீண்டும் திறக்க வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

வேலூர், ஜூன் 25: குடிநீர் பற்றாக்குறையை போக்க மூடப்பட்ட கிணறுகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் டிஆர்ஓ பார்த்தீபன் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களின் குடிநீர் ஆதாரமாக 70 அடி ஆழமுள்ள கிணறும், அதற்கு அருகிலேயே ஆழ்துளை கிணறும் உள்ளது. இதிலிருந்து பெறப்படும் நீரை சின்டெக்ஸ் தொட்டி அமைத்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் நடந்து வந்தது.

இந்நிலையில், பிள்ளையார் கோயில் எதிரே இருந்த கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவற்றை சிலர் மூடிவிட்டனர். தற்போது எங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, கிணறு மற்றும் ஆழ்துளை கிணற்றை சீரமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர். மேல்விஷாராம் தஞ்சாவூரான் காலனி 3வது தெரு மக்கள் அளித்த மனுவில், ‘நாங்கள் இந்து ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்கள். தஞ்சாவூரான் காலனி 3வது தெரு இதற்கு முன் 2வது வார்டாக இருந்தது. தற்போது வார்டு சீரமைப்பின்போது 6வது வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூரான் காலனி 3வது தெருவில் இருந்த முதல் 20 வீடுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 5வது வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகள் 6வது வார்டில் உள்ளது.

தஞ்சாவூரான் காலனியில் உள்ள அனைவரும் அண்ணன், தம்பிகளாக ஒற்றுமையாக வசித்து வந்தோம். இப்போது எங்களை திட்டமிட்டு பிரித்து வார்டு மாற்றி உள்ளனர். ஏற்கனவே 5வது வார்டில் ஓட்டுபோடும் இடத்தில் அடிக்கடி சண்டையிட்டும், தகாத வார்த்தையில் பேசுவதும் நடந்து வருகிறது. எனவே 5வது வார்டில் சேர்க்கப்பட்டதை ரத்து செய்து 6வது வார்டிலேயே மீண்டும் சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல், மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவில், ‘வேலூர் கோட்டை நுழைவு வாயில் அருகே ஆவின் பாலகம் எதிரே காலியாக இருந்த இடத்தில் மாற்றுத்திறனாளிகள் நாற்காலியில் ஒயர் பின்னும் தொழிலை மேற்கொண்டு வந்தோம். தற்போது ஆவின் பாலகம் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அமருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நாங்கள் பழைய இடத்தில் அமருவதற்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்றனர்.

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘திருப்பத்தூர் ஒன்றியத்தில் பூங்குளம், மிட்டூர், மரிமானிகுப்பம் உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. எனவே காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிதண்ணீர் வழங்க வேண்டும்’ என்றனர். இதேபோல் வீட்டுமனை பட்டா, முதியோர் பென்சன், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களை வழங்கினர். அதனை கலெக்டர் ராமன் மற்றும் சப்-கலெக்டர் மெகராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Tags : wells ,
× RELATED சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தி வந்த அகழாய்வு பணி இன்றுடன் நிறைவு