பொருட்கள் வழங்காததை கண்டித்து ரேஷன் கடையை மக்கள் முற்றுகை: ஊழியர் ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் அத்தியாவசிய பொருட்கள் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். அப்போது, அங்கு வேலை பார்த்த ஊழியர் கடையை பூட்டி விட்டு, ஓட்டம் பிடிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவொற்றியூர் பூம்புகார் நகரில் உள்ள நியாய விலைக் கடையில் 870 குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக இந்த நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரிவர மண்ணெண்ணெய் வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.

அப்படியே வழங்கினாலும், குறிப்பிட்ட அளவை விட குறைவாகவே ஊழியர்கள் வழங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும் டீத்தூள், சோப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்கினால் தான் கார்டுதாரர்களுக்கு அரிசி, சக்கரை வழங்கப்படும் என அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், நியாய விலைக் கடை ஊழியர்களுக்கும், குடும்ப அட்டைதாரர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்களை கடை ஊழியர்கள் வெளி சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பதாகவும் கூறப்படுகிறது.  ஊழியர்களின் முறைகேடு மற்றும் அடாவடித்தனத்தை கண்டித்து பொதுமக்கள் பலமுறை  போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில், நேற்று காலை இந்த நியாய விலைக் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக பெண்கள் குவிந்தனர். அப்போது, பெரும்பாலான பொருட்கள் இருப்பு இல்லை எனவும், குறைந்தளவு பொருட்களே வழங்க முடியும் எனவும் கடை ஊழியர் தெரிவித்துள்ளார். இதனால் பெண்கள், கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர், பெண்களை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் நியாய விலைக் கடையை முற்றுகையிட்டனர். அப்போது, ஊழியர் கடையை பூட்டி விட்டு ஓட்டம் பிடிக்க முயன்றார்.

ஆனால், அவரை சூழ்ந்துகொண்ட பெண்கள், கடையை திறக்க கோரினர். ஆனால்,  அவர் திறக்கவில்லை இதையடுத்து பெண்கள் கடையின் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த உணவு பொருள் வழங்கல் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களை சமாதானம் செய்தனர். மேலும், ரேஷன் பொருட்களை முறையாக வினியோகம் செய்ய வேண்டும், முறைகேட்டில் ஈடுபட்டால் இடமாற்றம் செய்யப்படுவீர்கள் என கடை ஊழியருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : shop ,
× RELATED தஞ்சையில் பொங்கல் திருநாளில்...