×

பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் பகுதியில் இரவில் நிலத்தடி நீரை உறிஞ்சிய லாரிகளை மக்கள் சிறைபிடிப்பு: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே அனுமதியின்றி இரவில் நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்துச் சென்ற தனியார் டேங்கர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரிவர பெய்யாததால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் முற்றிலும் வறண்டு விட்டன. மேலும், கோடையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் நிலத்தடிநீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால்  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. பெரும்பாலான மக்கள், டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீரை நம்பியிருக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. இதனால் டேங்கர் லாரி வைத்திருப்பவர்கள், எந்த இடத்தில் தண்ணீர் கிடைத்தாலும் அதனை எடுத்து சென்று விற்பனை செய்கின்றனர்.

பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம், பாணவேடு தோட்டம், பிடாரிதாங்கல் ஆகிய பகுதிகளில் தனியார் நிலங்களில் அதிகளவில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில்  தண்ணீர் உறிஞ்சி, அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, பாரிவாக்கம் அருகே நேற்று முன்தினம் இரவு நிலத்தடி நீரை உறிஞ்சி, ஏற்றி சென்ற தனியார் டேங்கர் லாரிகளை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 60 அடியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடத்தில், தற்போது 300 அடி முதல் 600 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் வேண்டுமென்றால் மக்களின் தாகம் தீர்க்க இங்கிருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் எடுத்து செல்லலாம். ஆனால் இங்கு முழுக்க, முழுக்க வியாபார நோக்கத்தோடு தனியார் தண்ணீர் லாரி வைத்திருப்பவர்கள், நாளொன்றுக்கு 500 முதல் 700 லாரிகளில் தண்ணீர் அனுமதியின்றி உறிஞ்சி எடுத்துச் செல்கின்றனர். இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் கண்டும் காணாமல் உள்ளனர். எனவே, இந்த தண்ணீர் திருட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்’’ என்றனர். இதைத் தொடர்ந்து தற்காலிகமாக அந்த பகுதிகளில் லாரிகளில் தண்ணீர் எடுக்க போலீசார் தடை விதித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...