×

நீர்நிலைகளை தூர்வாராத தமிழக அரசு கோயில்களில் யாகம் நடத்தி மக்களை ஏமாற்றுகிறது கனிமொழி எம்பி பேச்சு

கோவில்பட்டி, ஜூன் 25: நீர்நிலைகளை தூர்வாராத தமிழக அரசு கோயில்களில் யாகம் நடத்தி மக்களை ஏமாற்றுகிறது என கோவில்பட்டியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார். கோவில்பட்டியில் நகர திமுக சார்பில் கருணாநிதி 96வது பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி பங்கேற்று பேசியதாவது:  நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்திற்கு துரோகம் செய்து வரும் பா.ஜ.விற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். தமிழகத்தில் மக்களின் அடிப்படை பிரச்னைகள் எண்ணி விட முடியாத அளவிற்கு உள்ளன. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை. டாஸ்மாக் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என இந்த அரசு தெரிவித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. ரேஷன் கடை மற்றும்  பள்ளிகளை மூட நினைக்கும் தமிழகஅரசு பெண்களின் கோரிக்கையான டாஸ்மாக் கடையை மூட மறுக்கிறது.

தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையே இல்லை என கூறி வரும் எடப்பாடி பழனிச்சாமி எந்த மாநிலத்திற்கு முதல்வர் என்று தெரியவில்லை. டெல்லிக்கு அடிக்கடி முதல்வர் செல்வதால், அவருக்கு டெல்லி தான் தலைமையாக உள்ளது. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக திமுக கூறுவது வெறும் மாயை என்று மனசாட்சி இல்லாமல் முதல்வர் பேசுகிறார். முதியோர், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவைகள் என யாருக்கும் உதவித்தொகை கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பு இல்லை, புதிய தொழிற்சாலைகள் எதுவும் தமிழகத்தில் தொடங்கப்படவில்லை. இவற்றை பற்றி கவலைப்படாமல் தங்களுடைய ஆட்சியை காப்பற்றி கொள்ள நினைப்பவர்கள் தான் முதல்வரும், துணை முதல்வரும்.  மழை பெய்வதற்கு மக்கள் கோயில் மற்றும் ஆலயங்களில் பூஜை மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தமிழகத்தை ஆளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீர், நிலைகளை தூர்வாராமல், கோயில்களில் யாகம் நடத்தி மக்களை ஏமாற்றுகிறது. குடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காக மதத்தின் பெயரில் மக்களை தமிழக அரசு ஏமாற்றுகிறது.

நாடாளுமன்றத்தில் பதவி ஏற்கும்போது சில தலைவர்கள் பெயர்களை சொல்லும்போது பா.ஜ.கவினர் குரல் எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, திராவிடம் வாழ்க என்று திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பி நாடாளுமன்றத்தை கதிகலங்க வைத்தோம். தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சியை பிடிக்கும். தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும்  நிறைவேற்றப்படும். இவ்வாறு கனிமொழி எம்.பி.,பேசினார். பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ, நகர செயலாளர் கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன், ராதாகிருஷ்ணன், நகர அவைத்தலைவர் கணேசன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மணி, மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ராமர், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, துணை அமைப்பாளர் சேதுரத்தினம், முன்னாள் நகர செயலாளர் சிவசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயம் காப்போம் வாழையில்அதிக மகசூல்
வாழையின் அனைத்து பாகங்களும் விவசாயிகளுக்கு பலவிதங்களில் பயன்படுகிறது. வாழை சாகுபடியில் அதிக மகசூலுக்கு சில வழிமுறைகள் அவசியம். வாழையில் களைகளை கட்டுப்படுத்த மூடாக்கு செய்யலாம். தட்டை பயிரை வாழையில் ஊடுபயிராக பயிர் செய்யலாம். வாழையை நடவு செய்யும் போதே தட்டை பயிரை தூவி விதைப்பு செய்திட வேண்டும். இவற்றின் அதிவேக வளர்ச்சி சூரிய வெளிச்சம் மண்ணில் படாத வண்ணம் மண்ணை மூடிக்கொள்ளும். இதன்மூலம் மகசூலும் கிடைக்கும். பூக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்தும் கொள்ளலாம்.வாழையில் பாகல், பீர்க்கன் போன்ற கொடிவகைகளையும் ஊடுபயிராக பயிரிடலாம். வாழைக்கு மூடாக்கு செய்யும் நிலமானது நல்ல வடிகால் வசதி கொண்டதாக இருக்க வேண்டும். அதாவது தண்ணீர் சரியான அளவு இருக்கும்போது மட்டும்தான், அளவான ஈரப்பதம், நல்ல காற்றோட்டம் மற்றும் மண்ணில் பொலபொலப்பு தன்மை ஏற்படும். இதனால் மண்ணில் நுண்ணுயிர்கள் அதிகரிக்கும். கரையான்கள் மூடாக்குகளை உணவாக பயன்படுத்தி மண்ணை வளமாக்கும். மண்புழுவும் அதிகளவில் உருவாகி இயற்கையான மண்ணின் தன்மையை நிலைநிறுத்தும். இதன்மூலம் வாழை மட்டுமின்றி, ஊடுபயிர்கள் மூலமும் மகசூலை பெற்றிடலாம்.

10 பைசா வாடகையில் கிட்டங்கிகள்
வேளாண் விளைபொருட்களை 10 பைசா வாடகையில் கிட்டங்கிகளில் பாதுகாத்திட பல்வேறு வசதிகள் உள்ளன. நெல்லை வேளாண் விற்பனைக்குழுவின் கீழுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீன கிட்டங்கிகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ளன. இதில் விவசாயிகள் விளை பொருட்களை இருப்பு வைக்க வாடகையாக நாள் ஒன்றுக்கு குவிண்டாலுக்கு 10 பைசா வசூலிக்கப்படும். வியாபாரிகள் குவிண்டாலுக்கு 20 பைசா செலுத்த வேண்டும். மேலும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்கள் விளைபொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெறும்

வசதிகளும் உண்டு. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களின் மதிப்பீல் 75 சதவீதம் கடன் பெறலாம். அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை மிக குறைந்த வட்டியில் (5 சதவீதம்) 180 நாட்கள் வரை இருப்பு வைத்து பெற்று கொள்ளலாம்.
வியாபாரிகள் தாங்கள் கொண்டுவரும் விளைபொருட்களின் மதிப்பில் பாதி தொகை அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாம். 9 சதவீதம் வட்டியில் 180 நாட்கள் வரை விளைபொருளை இருப்பு வைத்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு மேலும் விபரங்களை பெற்றுகொள்ளலாம் என நெல்லை விற்பனைக்குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.
(செவ்வாய்க்கிழமை தோறும்)

Tags : Tamil Nadu ,govt temples ,
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...