×

வீரபாண்டியன்பட்டணத்தில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் ஆற்றுநீர் விநியோகிக்க போராட்டம்

உடன்குடி,ஜூன் 25: திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணத்தில் வீட்டு குடிநீர் இணைப்புகளில் ஆற்று நீர் வழங்க கோரி ஊர் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆண்களும், பெண்களும் திரளாக பங்கேற்றனர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன்பட்டணம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் சுமார் 5ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 1300வீட்டு குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில் 272குடிநீர் இணைப்புகளுக்கு ஆத்தூர் பகுதியிலிருந்து ஆற்று குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள குடிநீர் இணைப்புகளுக்கு நத்தைகுளம் பகுதியிலிருந்து போர்வெல் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் உப்பு தன்மையுடையதாக இருப்பதாவும், இதனால் உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும் வீரபாண்டியன்பட்டணம் பகுதியில் ஒரே சீராக ஆற்று குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் சார்பில் பாத்திமா ஆலயம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ரென்ஸ்லின் ரொட்ரிகோ தலைமை வகித்தார். ரொபின் ரொட்ரிகோ முன்னிலை வகித்தார். தர்ணா போராட்டத்தில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் ரொட்ரிகோ, எடிசன் பர்னாண்டோ, அன்டோ ராயன், சேவியர் பீறிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டம் குறித்து அந்தபகுதி பெண்கள் கூறியதாவது: ‘வீரபாண்டியன்பட்டணம் 200ஆண்டுகள் பழமையான ஊர். இங்கு கடந்த 66ஆண்டுகளாக ஆற்று குடிநீர் வழங்கப்பட்டது. தற்போது நிலவும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உப்பு சப்ளை செய்யப்படுகிறது. அனைவருக்கும் சீராக ஆற்று குடிநீர் வழங்க அரசியல் கட்சியினர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறினர். தர்ணா போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்