×

பேச்சிப்பாறையில் ஆகஸ்ட் மாதம் செயல்பட தொடங்குகிறது 1.5 கோடியில் தேனீ மகத்துவ மையம் விவசாயிகள் மகிழ்ச்சி

குலசேகரம், ஜூன் 25: கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 ஆயிரம் தேனீ வளர்ப்போர் உள்ளனர். மார்த்தாண்டம் நகரம் தமிழகத்தின் தேன் கிண்ணம் என்று வர்ணிக்கப்படுகிறது. குமரி மாவட்டத்திலுள்ள தேனீ வளர்ப்போரால் 2 லட்சம் தேனீ குடும்பங்கள் மூலம் ஆண்டுக்கு ஏறக்குறைய 2 ஆயிரம் டன் வரை தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 1980ம் ஆண்டு தமிழகம் தேன் உற்பத்தியில் இந்தியாவில் முதல் இடத்தைப் பிடித்தது.  இந்நிலையில் தேனீக்களுக்கு ஏற்பட்ட, ‘தாய் சாக் புரூட்’ நோய் காரணமாக ஏராளமான தேனீ குடும்பங்கள் தொடர்ச்சியாக அழிந்து, தேன் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து குமரி மாவட்டத்தில் தேனீ ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுவடைந்தது.

சட்டப் பேரவையிலும் இது தொடர்பாக குரல் எழுப்பப்பட்டது. இந்நிலையில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் பேச்சிப்பாறை தோட்டக் கலை ஆராய்ச்சி மைய வளாகத்தில் ₹1.50 கோடி மதிப்பீட்டில் தேனீ மகத்துவ மையம் அமைக்கப்படுகிறது.  இங்கு தேனீ வளர்ப்பு பயிற்சி மையம், மாதிரி தேனீ வளர்ப்பு பண்ணை, வீரியமுள்ள ராணித் தேனீக்கள் உருவாக்கம், தேன் பதப்படுத்தும் மையம், தேன் பரிசோதனை மற்றும் தர ஆய்வு மையம், மலர்த்தோட்டம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. இது குறித்து மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் அசோக் மேக்ரின் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் தேனீ வளர்ப்புத் தொழிலை மேம்படுத்தும் வகையில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன், பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி மைய வளாகத்தில் ₹1.50 கோடி மதிப்பீட்டில், தேனீ மகத்துவ மையம் அமைய உள்ளது.  

இம்மையத்திற்கு தேனீ வளர்ப்பு தொடர்பான பொருளை அளிக்கும் வகையில் இன்று (செவ்வாய்கிழமை) ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. மேலும் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளுக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தேனீ வளர்ப்புப் பயிற்சி மையத்தில் ஒரு வகுப்பில் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதேப்போன்று ராணி தேனீ உற்பத்தி மையத்தில் வீரியமிக்க ராணி தேனீக்கள் உற்பத்தி செய்யப்பட்டு தேனீ வளர்ப்போருக்கு வழங்கப்படும்.  தேன் பதப்படுத்துதல் மையத்தில் தேனீ வளர்ப்போர் கொண்டு வரும் தேன் பதப்படுத்தி கொடுக்கப்படும். இதேப்போன்று தேன் பரிசோதனை மற்றும் தர ஆய்வு மையத்தில் தேனீ வளர்ப்போர் எடுத்து வரும் தேனை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படும்.  இந்தப்பணிகள் காலப்போக்கில் விரிவாக்கம் செய்யப்படும். வரும் ஆகஸ்ட் மாதம் தேனீ மகத்துவ மையம் செயல்படத் தொடங்கும் என்றார்.

Tags :
× RELATED மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.5...