சவுதி அரேபியாவில் 2 தொழிலாளர்கள் தவிப்பு கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் காத்திருப்பு போராட்டம்

நாகர்கோவில், ஜூன் 25: சவுதி அரேபியாவில் தவிக்கும் தொழிலாளர்களை மீட்க வேண்டும் என்று கேட்டு அவரது உறவினர்கள் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில்  கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.  குமரி மாவட்டம் இரணியல் அருகே காரங்காடு பகுதியை சேர்ந்த மரிய மிக்கேல்ராஜ், குமார் ஆகியோர் சவுதி அரேபியா ரியாத்தில் வேலைக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு ஒழுங்காக வேலையும் கொடுக்காமல், வேலை பார்த்த சம்பளமும் கொடுக்காமல் துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. காரங்காடு பகுதியை சேர்ந்த ஒருவர்தான் இவர்களை வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். தற்போது பாஸ்போர்ட், விசா இல்லாமல் இருவரும் ஊருக்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கோரி, கடந்த மே மாதம் தொழிலாளர்களின் குடும்பத்தினர் குமரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் தலைமை செயலகத்திலும், கடந்த 20ம் தேதி குமரி மாவட்ட கலெக்டரிடமும் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே உத்தரவிட்டார். ஆனால் இதுவரையிலும் போலீசார், அதிகாரிகள் எந்தவித நடவடிக்ைக எதுவும் எடுக்கவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் நேற்று நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகை தந்து வாகன நிறுத்தும் இடத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் வரை தொடர்ந்து.

 மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து போராட்டத்திற்கு தலைமை வகித்தார். அப்போது தொழிலாளர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த இடைத்தரகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் உள்ள 2 தொழிலாளர்களுக்கும் சம்பளத்தை பாக்கி இல்லாமல் கொடுக்க வேண்டும். பாஸ்போர்ட், விசா ஆகியவற்றையும் கொடுத்து சொந்த ஊருக்கு அவர்களை அழைத்து வர குமரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.போராட்டத்தை ெதாடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஏஎஸ்பி ஜவஹர் தலைமையில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்திக்க அழைத்து சென்றனர். தொடர்ந்து மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை முடித்துக்கொண்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Relatives ,Saudi Arabia ,
× RELATED நாகர்கோவிலில் மின் கம்பங்கள் மீது மோதி கடைக்குள் புகுந்த சரக்கு லாரி