×

குமரியில் 11 வயதில் மதுவுக்கு அடிமையாகும் மாணவர்கள்

நாகர்கோவில், ஜூன் 25: 11 வயதில் மது பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகும் அவல நிலை ஏற்பட்டு உள்ளதாக, போதை நோய் நலப்பணிகள் ஒருங்கிணைப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் தேதி உலக போதை விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்ட போதை நோய் நலப்பணிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாளை (26ம்தேதி) குமரி மாவட்டத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி மற்றும் ஜோதி ஓட்டம் நடக்கிறது. இது குறித்து ஒருங்கிணைப்பாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: உலக போதை விழிப்புணர்வு தினத்தையொட்டி வரும் 26ம் தேதி போதை இல்லா வாழ்வை நேசி என்ற மையக்கருத்தை அடிப்படையாக கொண்டு நாகர்கோவிலில் விழிப்புணர்வு விழா மற்றும் ஜோதி ஓட்டம் நடக்கிறது. 26ம் தேதி காலை 6 மணிக்கு கன்னியாகுமரி, தென்தாமரைக்குளம், பள்ளம், ராஜாக்கமங்கலம் துறை, முட்டம், குளச்சல், ஆலஞ்சி, குறும்பனை, இனயம், கார்மல்நகர், சுங்கான்கடை, எட்டாமடை, மறவன்குடியிருப்பு, ஆரல்வாய்ெமாழி ஆகிய 14 இடங்களில் இருந்து ஜோதி ஓட்டம் தொடங்கி, நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரியில் நிறைவடைகிறது.

அதைத்தொடர்ந்து கல்லூரி கலையரங்கில் காலை 9 மணிக்கு விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மாவட்ட நீதிபதி கருப்பையா, லோக் அதாலத் தலைவர் நீதிபதி மகிழேந்தி, கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, எஸ்பி நாத், முதன்மை கல்வி அலுவலர் செந்தி வேல்முருகன், கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ், அரசு வழக்கறிஞர் ஞானசேகர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியில் போதையில் இருந்து மீண்டோர் தங்கள் அனுபவ பகிர்வுகளையும் தருகின்றனர்.  இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டமாக இன்று (25ம்தேதி) காலை 10 மணிக்கு நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் நிகழ்வில் ேபாதை ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிடுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த குழுவில் உள்ள இயேசு சபை போதை நோய் பணிக்குழு நிர்வாகி சகாய பிராங்கோ கூறுகையில், 1980 ல் 25 வயது, 90 - 95ம் ஆண்டில் 23 வயது, 2000த்துக்கு பின் 19 வயது, 2010க்கு பின் 17 வயதில் குடிப்பழக்கம், போதை பழக்கத்துக்கு இளைஞர்கள் ஆளாகி வந்தனர். ஆனால் இப்போது நிலைமை தலை கீழாக மாறி உள்ளது. சமீபத்தில் நடந்த ஆய்வில் 11 வயதில், அதாவது 6ம் வகுப்பு படிக்கும் போதே போதைக்கு அடிமையாகி விடுகிறார்கள். சமீப காலமாக வாயில் மெல்லக்கூடிய புகையிலை அதிகரித்துள்ளது. ஸ்கூல் பேக்கில் புகையிலை பாக்கெட், குவார்ட்டர் பாட்டில்கள் உள்ளன. இது இளைய தலைமுறையை வெகுவாக பாதிக்கிறது. எனவே மதுக்கடைகள் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார். பேட்டியின் போது காணிக்கை மாதா புதுவாழ்வு மைய இயக்குநர் ஜே. சோபி, ஹோலிகிராஸ் கல்லூரி முதல்வர் எஸ்.சோபி, செய்தி தொடர்பாளர் அருள் குமரேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Tags : Kumari ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...