×

குடிநீர் மற்றும் 100 நாள் வேலை கேட்டு பிடிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கெங்கவல்லி, ஜூன் 21: குடிநீர் விநியோகம் மற்றும் நூறு நாள் வேலை கேட்டு, ஆணையம்பட்டி புதூரை சேர்ந்த  பொதுமக்கள், நேற்று காலை கெங்கவல்லி பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம்  கெங்கவல்லி அருகே உள்ள ஆணையம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஆணையம்பட்டிபுதூரில், 5 மற்றும் 9வது வார்டுகளில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக, இவர்களுக்கு சரிவர பணி வழங்கப்படவில்லை. மேலும், இப்பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செந்தில்குமார், பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘ஆணையம்பட்டிபுதூரில் நூறு நாள் வேலை திட்டத்தில், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பணி வழங்கப்படுகிறது. இப்பகுதியில் பழுதடைந்த சின்டெக்ஸ் தொட்டியை சீரமைக்காததால், குடிநீர் சரிவர விநியோகிப்பது இல்லை. இதனால் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம்,’ என்றனர்.

இதற்கு பதில் அளித்த ஆணையாளர் செந்தில்குமார், கிராமத்தில் தற்போது தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. விவசாய மேம்பாட்டுத் திட்டத்திற்கு கீழ் மட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிளாஸ்டிக் தொட்டியை சீரமைத்து குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார். இதனால் சமாதானமடைந்த மக்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : blockade ,office ,PDO ,
× RELATED பிரதமர் இல்ல முற்றுகை...