×

தம்பதி மீது தாக்குதல் ஆட்டோ டிரைவரை கண்டித்து மறியல்

பள்ளிபாளையம், ஜூன் 21:  குமாரபாளையத்தில் தம்பதியை தாக்கிய ஆட்டோ டிரைவரை கண்டித்து, சக டிரைவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கலைமகள் வீதியைச் சேர்ந்தவர் அப்துல்கரீம்(32). இவரது மனைவி சையது பாத்திமா(28). மாற்றுத்திறனாளியான அப்துல்கரீம், காலனி ஹாஸ்பிட்டல் பஸ் ஸ்டாப்பில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அவரை பார்ப்பதற்காக ஆட்டோ ஸ்டாண்ட் சென்ற சையது பாத்திமாவை, அதே ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வரும் கணேசன்(45) என்பவர், தனது மொபைல் போன் மூலம் படம் எடுத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட அப்துல்கரீம் மற்றும் சையது பாத்திமாவை, கணேசன் சரமாரியாக தாக்கி, தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதில், காயமடைந்த இருவரும், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து, அப்துல்கரீம் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார், நேற்று காலை கணேசன் வீட்டிற்கு விசாரிக்க சென்றனர். அப்போது, கணேசன் வீட்டினுள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். இதையறிந்த அப்துல்கரீம் மற்றும் உறவினர்கள், கணேசன் வீட்டை முற்றுகையிட்டனர். மேலும், அவரை கைது செய்யக்கோரி, ஆட்டோ ஓட்டுநர்கள் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் திரண்டனர். பின்னர், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, காலை 9.30 மணியளவில் கணேசன் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். அப்போது, போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இதையறிந்த ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Attack ,
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு