ராஜாவாய்க்காலில் முன்னறிவிப்பின்றி நீர்திறப்பை நிறுத்தியதால் விவசாயிகள் போராட்டம்

பரமத்திவேலூர், ஜூன் 21:  பரமத்திவேலூர் ராஜாவாய்க்காலில் முன்னறிவிப்பின்றி நீர்திறப்பு நிறுத்தப்பட்டதை கண்டித்து, பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வெற்றிலை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பரமத்திவேலூரை அருகே ஜேடர்பாளையம் தடுப்பணையில் இருந்து, ராஜா வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் பிரித்து விடப்படுகிறது.

இந்த தண்ணீரை நம்பி, நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், வாய்க்கால் பராமரிப்பு பணிக்காக, நேற்று முன்தினம் மாலை முன்னறிவிப்பின்றி தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த வெற்றிலை விவசாயிகள், நேற்று பரமத்திவேலூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் திரண்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெற்றிலை கொடி பதித்து வேர்பிடிக்கும் தருவாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், மாற்று தண்ணீர் பாய்ச்சினால், கொடி வேர் பிடிக்காமல் வெற்றிலை கொடிகள் அழுகி கருகி விடும். எனவே, இன்னும் 25 நாட்களுக்கு ராஜாவாய்க்காலில் தொடர்ந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதுதொடர்பாக உயரதிகாரிகளுடன் பேசி, ஓரிரு நாட்களில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறியதின்பேரில், விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags : Raja Kakal ,
× RELATED முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நிலவரம்