கொல்லிமலையில் விவசாயியை வெட்டியவர் கைது

சேந்தமங்கலம், ஜூன் 21: கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், ஆரியூர் நாடு ஊராட்சி குழிவளவுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மணிகண்டன்(38). இவரது காரை, குண்டூர்நாடு தேனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபால்(35) என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு எடுத்துள்ளார். ஆனால், அதற்கான தொகையை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், அவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேனூர்பட்டிக்கு வந்த மணிகண்டன், மீண்டும் வாடகை தொகையை கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கோபால், மறைத்து வைத்திருந்த அரிவாளால், மணிகண்டனை சரமாரியாக வெட்டினார். இதில், படுகாயமடைந்த மணிகண்டனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, செம்மேடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான கோபாலை நேற்று கைது செய்தனர்.

Tags :
× RELATED கொல்லிமலையில் வல்வில்ஓரிக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்