×

கொத்தமல்லி ரூ.180, இஞ்சி ரூ.150 கம்பத்தில் காய்கறி விலை உயர்வால் மக்கள் பாதிப்பு

கம்பம். ஜூன் 21:  பருவமழை தவறியதால், மழையை நம்பியிருந்த மானாவாரி விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்தது. நிலத்தடி நீர் குறைவினால் இறவை சாகுபடியிலும் காய்கறி உற்பத்தி குறைந்தது. இதனால் சந்தைகளில் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு வருகிறது. இந்த வரலாறு காணாத விலை உயர்வு, நடுத்தர, ஏழை மக்களை மிகவும் பாதித்துள்ளது. அன்றாடம் உணவுக்கு பயன்படுத்தும் காய்கறிகளைக்கூட வாங்க முடியாத அளவுக்கு விலை அதிகரித்துள்ளது.  கம்பம் பகுதியில் கடந்த சில நாட்களாக அனைத்து வீட்டு சமையலிலும் அன்றாடம் பயன்படுத்தும் புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கம்பம் உழவர்சந்தையில் நேற்று காய்கறிகளின் விலைவிபரம் (1 கிலோ) சின்ன வெங்காயம் 58 ரூபாய், பச்சைமிளகாய் 55 ரூபாய், தக்காளி 34 ரூபாய், பீன்ஸ் 80 ரூபாய், கேரட் 54 ரூபாய், இஞ்சி 150 ரூபாய், கத்தரி 28 ரூபாய், வெண்டைக்காய் 28 ரூபாய், சீனி அவரை 28 ரூபாய், முட்டைக்கோஸ் 32 ரூபாய்,  பெரிய உள்ளி 26 ரூபாய்,  முருங்கைகாய் 40 ரூபாய், உருளைக்கிழங்கு 20 ரூபாய், பீட்ரூட் 28 ரூபாய்,  கருணை 42 ரூபாய், பாகற்காய் 55, கோவங்காய் 40 ரூபாய், தட்டான் 30 ரூபாய், கருவேப்பிலை 26 ரூபாய், மல்லி 180 ரூபாய், புதினா 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து உழவர்சந்தையிலுள்ள விவசாயி ஒருவர் கூறுகையில், `` உற்பத்தி குறைவால் கடந்த ஒரு சில மாதமாக காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலை இன்னும் சில வாரங்கள் வரை நீடிக்கலாம். விலை அதிகரித்திருந்தாலும், உற்பத்தி குறைவினால் விவசாயிகளுக்கு இதில் அதிகலாபம் இல்லை’’ என்றார்.   





Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா