×

தமிழக, கேரளா எல்லையை இணைக்கும் கம்பம்மெட்டு நெடுஞ்சாலையில் தடுப்புச்சுவர் அதிகரிக்கப்படுமா?

கம்பம், ஜூன் 21: கம்பம்மெட்டு செல்லும் சாலையில் தடுப்புச்சுவர்களை அதிகமாக கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை முன்வரவேண்டும். இதனால் விபத்துக்கள் குறைய வாய்ப்புகள் உண்டாகும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு செல்லும்சாலை 13 கிலோ மீட்டரில் கேரளாவை இணைக்கிறது. 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. பூமியில் இருந்து 1500 மீட்டருக்கு மேல் உள்ளது. தினந்தோறும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் தமிழகத்திற்கு வருகின்றன. தமிழகத்தில் விளையும் காய்கறிகள், அரிசி, மளிகை, கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதால் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. ஆனால், கம்பம்மெட்டு சாலையில் விபத்துக்கள் நடக்கும் அபாயகரமான பகுதிகள் உள்ளன. இங்கு தடுப்புசுவர் சொல்லும்படியாக இல்லை. மாநில நெடுஞ்சாலைத்துறையினரும் இதனைக் கண்டுகொள்ளாமல் உள்ளதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் இருந்து செல்லும் ஜீப்கள் அடிக்கடி விபத்துக்களை சந்திக்கின்றன. இதில் தொழிலாளர்கள் உயிரிழப்பதும், காயமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.

எனவே, ஆபத்தான சாலைகளில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ``தினந்தோறும் அதிக போக்குவரத்து நிறைந்த கம்பம்மெட்டு சாலையில் தடுப்புச்சுவர் குறைந்த அளவே உள்ளது. இதனால் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுத்திட உடனடியாக தடுப்புச்சுவர் கட்டுவதற்கு உரிய நடவடிக்கையை மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எடுக்கவேண்டும்’’ என்றனர்.



Tags : border ,Tamil Nadu ,Kerala ,
× RELATED பறவை காய்ச்சல் எதிரொலி தமிழக-கேரள...