×

ஒலி பெருக்கி தொல்லையால் பள்ளி மாணவர்கள் அவதி

தேனி, ஜூன் 21: தேனி மற்றும் சுற்றுக்கிராமங்களில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியினை பயன்படுத்தி, அதிக சத்தத்தில் பாடல்கள் இசைக்கப்படுவதால், மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது பற்றி போலீசில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.தேனி மற்றும் சுற்றுக்கிராமங்களில் கோயில் திருவிழா, விசேஷ வீடுகள், இழவு வீடுகள் என விழாவாக இருந்தாலும் அதிகளவில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தேனி, வீரபாண்டி, கோட்டூர், உப்புக்கோட்டை, பாலார்பட்டி மற்றும் தேனி, போடி, பெரியகுளம் ஒன்றிய கிராமங்களில் அதிகளவில் இப்பிரச்னை உள்ளது. இதனால் பள்ளிகளில் பாடங்களை நடத்த முடியவில்லை. வீட்டிலும் மாணவர்கள் படிக்க முடியவில்லை. நோயாளிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது என்ற விதியிருந்தும் அவற்றை அலற விடுகிறார்கள். இதுகுறித்து ஒலிபெருக்கி அமைப்பாளர்களிடம் இது பற்றி பொதுமக்கள் கேட்டால், அவர்களை கடுமையாக மிரட்டுகின்றனர். அல்லது தாக்குகின்றனர். போலீசிடம் புகார் கொடுத்தாலும் பலன் இல்லை. எனவே பல கிராம மக்கள் ஒருங்கிணைத்து சென்று மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கூறினர்.

Tags : School students ,
× RELATED மதுராந்தகம் அருகே கடலில் குளிக்கச்...