×

மானாமதுரை அருகே குழாயில் சொட்டு சொட்டாக கசியும் தண்ணீரை சேகரிக்கும் பொதுமக்கள்

மானாமதுரை, ஜூன் 21: மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்தில் போர்வெல், கண்மாய், குளங்களில் நீர்இல்லாத நிலையில் சாயல்குடி கூட்டுகுடிநீர் திட்ட குழாய்களில் சொட்டு சொட்டாக கசியும் நீரை சேகரிக்க பெண்கள் மணிக்கணக்கில் காத்துகிடக்கின்றனர்.மானாமதுரை அருகே மதுரை ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ளது மேலப்பசளை கிராமம். இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் குடிக்க இப்பகுதியில் நல்ல தண்ணீர் கிடைக்காத நிலையில் ஊரின் நடுவில் இருந்த போர்வெல் தண்ணீர் உப்பாக இருந்த நிலையில் ஊற்று வற்றியது. மழை காலங்களில் இங்குள்ள கண்மாய், குளங்களில் சேகரமாகும் நீரை வடிகட்டி குடிப்பதற்கும் சமையலுக்கும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக கொளுத்தும் வெயிலுக்கு நீர்நிலைகள் வறண்டதால் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.வேறுவழியின்றி கிராம முகப்பில் உள்ள சாயல்குடிக்கு செல்லும் கூட்டுகுடிநீர் திட்டக்குழாயில் சொட்டு சொட்டாக கசியும் குடிதண்ணீரை சேகரிக்க மணிக்கணக்கில் காத்துக்கிடக்கின்றனர்.

நூறு குடும்பங்களுக்கு மேல் உள்ள இந்த கிராமத்திற்கு போதுமான நீர் நிலையில் கிடைக்காத நிலையில் ஒருசில குடும்பங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இதனால் இரவு முழுவதும் இந்த குழாயின் அருகே காத்திருந்து இந்த நீரை பிடித்து செல்கின்றனர். பணவசதி உள்ள மற்றவர்கள் குடி தண்ணீரை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.இது குறித்து பஞ்சவர்ணம், மல்லிகா கூறுகையில், பல ஆண்டுகளாக எங்கள் கிராமத்திற்கு உள்ளே நிரந்தரமாக குடிநீர் வசதி இல்லை. நாங்கள் ஊருக்கு வெளியே செல்லும் இந்த குழாயில் தான் மணிக்கணக்காக காத்துகிடந்து ஒரு குடம் நீரை எடுத்து செல்கிறோம். அதில் குடிக்க மட்டுமே பயன்படுத்துகிறோம். பெண் குழந்தைகள், ஆண்கள் தினமும் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீர் தட்டுபாட்டை சரிசெய்ய வேண்டும் என்றனர்




Tags : Civilians ,Manamadurai ,
× RELATED மானாமதுரை ரயில்நிலையத்தில் மீண்டும்...