×

கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாத அம்மா பூங்கா கலெக்டர் கவனிப்பாரா?

காரைக்குடி, ஜூன் 21: காரைக்குடி கழனிவாசல் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே, கடந்த 2017ம் ஆண்டு ரூ.30 லட்சம் செலவில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டி முடிக்கப்பட்டது. 50 சென்ட் நிலத்தில் முழுவதும் சுற்றுச்சுவர் அமைத்து குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், நடையாளர்களுக்கான பாதை மற்றும் உடற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டது.அப்பகுதியைச் சேர்ந்த பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பாண்டியன் நகர், ஜெய்ஹிந்த் நகர், விஏஓ காலனி, போக்குவரத்து காலனி மற்றும் போலீஸ் காலனி சேர்ந்த பொதுமக்கள் இதை பயன்படுத்துவதற்கு தயாராக இருந்தனர். ஆனால், பல மாதங்களாகியும் உடற்பயிற்சி கூடம் திறக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி வாலிபர்கள் சிலர் தாங்களே முன்வந்து உடற்பயிற்சிக்கூடம் அமைந்துள்ள பூட்டை உடைத்து மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.அதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பூங்காவையும் உபயோகப்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து ஜெய்ஹிந்த் நகரைச் சேர்ந்த கணபதி கூறுகையில், இப்பூங்கா மற்றும் உடற்பயிற்சிக் கூடம் கடந்த ஆண்டு 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது இதுவரை அரசுத் தரப்பிலோ, மாவட்ட நிர்வாகமோ இப்பூங்காவை திறக்க முன்வரவில்லை. இதுகுறித்து பலமுறை சாக்கோட்டை யூனியன் மற்றும் சங்கராபுரம் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பதிலும் இல்லை.

எனவே, இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் உடற்பயிற்சி கூட பூட்டை உடைத்து உடற்பயிற்சி செய்து வருகின்றனர். தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடற்பயிற்சி செய்துவருகின்றனர். இப்பயிற்சி மையத்தில் சில உடற்பயிற்சி உபகரணங்கள் பழுதடைந்தும், காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பூங்காவிற்கும் உடற்பயிற்சி கூடத்திற்கும் பணியாட்களை நியமித்து காலை மற்றும் மாலை வேளைகளில் பூங்காவையும் உடற்பயிற்சி கூடத்தையும் திறந்து விட்டால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’’ என தெரிவித்தார்.


Tags : mother park collector care ,
× RELATED அழகப்பா பல்கலையில் புதிய பட்டய படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் ஜி.ரவி தகவல்