மேலசெல்வனூர் அரசுப்பள்ளியில் கட்டி முடித்தும் திறக்கப்படாத கட்டிடங்கள் பல லட்சம் ரூபாய் வீணாகும் அவலம்

சாயல்குடி, ஜூன் 21:  கடலாடி ஒன்றியம், மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலய கண்மாய் அருகே அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைபள்ளி ஒருங்கே அமைத்துள்ளது.  தொடக்கப்பள்ளியில் 120 மாணவர்களும், உயர்நிலைபள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்களும் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளின் வகுப்பறை  கட்டிடங்களில் சில கட்டப்பட்டு பல வருடங்களாகி விட்டதால் சேதமடைந்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கு கம்பிவேலி அமைக்கப்பட்டது. இந்த கம்பிகள் சேதமடைந்து அறுந்து விழுந்துள்ளது. கல்தூண்களும் உடைந்து கிடக்கிறது.கழிவறையை சுற்றி கருவேலமர செடிகள், பட்டுபோன புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் கழிவறையை பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். அமைக்கப்பட்ட வேலி சேதமடைந்து இடிந்து, வேலி இல்லாததால் வகுப்பறை நடக்கும் வேளையில் கால்நடைகள் பள்ளி வளாகத்திற்குள் வருவதால் மாணவர்களுக்கு அவற்றை விரட்டுவதிலேயே நேரம் செலவாகிறது. மேலும் அருகிலிருக்கும் சாலையிலிருந்து வரும் விவசாய கழிவு குப்பைகள் பள்ளிக்குள் வருவதால் சுகாதார கேடு நிலவுவதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் கிழக்கு கடற்கரை சாலையோரம் மேலச்செல்வனூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய கட்டிடம், கழிவறைகள் கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் தரமற்று கட்டப்பட்டதால் கடந்த 8 வருடத்திற்கு மேலாக அவை திறக்கப்படாமல் கிடக்கிறது.  மேலும் மன்னார் வளைகுடா கடல் வாழ் உயிரின தேசிய காப்பகம், பறவைகள் சரணாலயம் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படாத இப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அவையும் சீமை கருவேல மரம் வளர்ந்து புதர்காடாக உள்ளது. அதிலிருந்த இரும்பிலான கேட் மாயமாகி விட்டது.  நபார்டு வங்கி நிதி திட்டத்தில் தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் அரசு பணத்தில் கட்டப்பட்ட பள்ளிக்கூடம் 8 வருடத்திற்கு மேலாக திறக்காமல், மீண்டும் மீண்டும் புதிய கட்டிடங்களை கட்டி அரசு பணத்தை வீணடித்துள்ளனர். கட்டிடம் கட்டியதிலிருந்து பள்ளி செயல்படாததால் கட்டிடம் சேதமடைந்து கிடக்கிறது. திறந்தவெளியாக இருப்பதால் சமூகவிரோதிகளின் கூடாரமாக செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். எனவே இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் மாணவர்களுக்கு  கூடுதலாக புதிய வகுப்பறைகள், கழிவறைகள் கட்டிதர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED குப்பைகளை பிரிக்கும் போது காற்றில்...