×

சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல்

வேப்பூர், ஜூன் 21: வேப்பூர்  அருகே சர்க்கரை ஆலை நிர்வாகம் ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறி விருத்தாசலம்-சேலம்  சாலையில் விவசாயிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து   பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சித்தூரில் திரு  ஆரூரான்  சர்க்கரை ஆலை உள்ளது.  இப்பகுதியை சுற்றியுள்ள கிராம விவசாயிகள்  தாங்கள்  சாகுபடி செய்த கரும்புகளை இந்த ஆலைக்கு வெட்டி அனுப்பி வந்தனர்.  இந்நிலையில்  கடந்த 2013ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு வரை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு  நிலுவைத் தொகையான சுமார் 120  கோடி ரூபாயை ஆலை நிர்வாகம் வழங்காமல் ஏமாற்றியுள்ளது. இதேபோல் விவசாயிகளின்  அனுமதியின்றி அவர்களின்  பெயரில் 19.17 கோடி ரூபாயை வங்கியில் கடனாகவும் பெற்றுள்ளனர்.  இதனால்  பாதிக்கப்பட்ட விவசாயிகள் திரு ஆரூரான் சர்க்கரை  ஆலை உரிமையாளர் ராம  தியாகராஜனை     கைது செய்யக்கோரி பல தரப்பட்ட  போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக வேளாண் துறை மற்றும் காவல்துறையினரிடம் விவசாயிகள் சார்பில் புகார்  அளிக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தனிக்குழு அமைத்து, ஆலை நிர்வாகத்திடம் இருந்தும், விவசாயிகளிடம் இருந்தும் தனித்தனியாக அறிக்கையை பெற்றுத்தருமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில் ஆலை நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு விவசாயிக்கும் தரவேண்டிய நிலுவைத் தொகையின் மதிப்பீட்டை குறைத்து கூறுவதாக கூறி நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் திரு ஆரூரான் சர்க்கரை ஆலையின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதற்கு ஆலை அதிகாரிகள் சரிவர தகவல் கொடுக்காததால், அதனை கண்டித்து விவசாயிகள் திடீரென ஆலை முன்பு விருத்தாசலம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேப்பூர் போலீசார், மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத நிலையில் மீண்டும் ஆலை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகளை ஆலையினுள் அழைத்து சென்றனர். இந்த பேச்சுவார்த்தையில் வேப்பூர் வட்டாட்சியர் செந்தில்வேல் தலைமை தாங்கி பேசும் போது, ஆலை நிர்வாகம் குறிப்பிட்ட மதிப்பீட்டில் அறிக்கை தாக்கல் செய்யாமல், விவசாயிகள் குறிப்பிடும் மதிப்பில் மட்டுமே அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஆலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகளின் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை