×

நல்லம்பள்ளியில் உழவர் நண்பர்கள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, ஜூன் 21: நல்லம்பள்ளி வேளாண்மை விரிவாக்க மையத்தில், அட்மா திட்டத்தின் மூலம் உழவர் நண்பர்கள் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. இதில், வட்டார உதவி வேளாண்மை உதவி இயக்குனர் தேன்மொழி பேசியதாவது:  நல்லம்பள்ளி வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள், சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி சாகுபடி செய்ய வேண்டும்.

இம்முறையில் நீரானது நேராக வேர்பகுதிக்கு செல்வதால், 75 சதவீதம் வரை நீரை சேமிக்கலாம். நீரில் கரையும் உரங்களை பயிரின் வேருக்கு கொடுக்கும் போது, உர செலவு குறைகிறது. விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க சிட்டா, அடங்கல், புகைப்படம், வரைபடம், ஆதார் எண், மண்வள அட்டை, நீர் பரிசோதனை ஆய்வு அறிக்கை, சிறு, குறு விவசாயிக்கான சான்று ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

உழவர் நண்பர்கள், கிராமங்களில் சொட்டு நீர் பாசன விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துவதற்கு உதவுவதின் மூலம், அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெற துணை புரிய வேண்டும். சாகுபடி நிலம் 5 ஏக்கருக்குள் உள்ள விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் குறித்து, வேளாண்மை அலுவலர் இளங்கோவன் பேசுகையில், ‘வறட்சி, புயல், ஆலங்கட்டி மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பயிர் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்,’ என்றார். கூட்டத்தில் வேளாண்மை துணை அலுவலர்கள் செல்வம், சதாசிவம் மற்றும் ரவிசங்கர், உதவி வோளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் அருண்குமார், கபிலன் மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Nallampalli ,peasant friends advice meeting ,
× RELATED தர்மபுரி மாவட்டத்தில் கொண்டைக்கடலை அறுவடை பணி தீவிரம்