×

கேரளாவில் மாயமான பெண் கரூர் ஜங்ஷனில் மீட்பு

கரூர், ஜூன் 21: கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் காணாமல் போன பெண்ணை, கரூர் ரயில்வே போலீசார் ரயில்வே நிலைய வளாகத்தில் மீட்டு கேரள போலீசாரிடம் ஒப்படைத்தனர். நேற்று அதிகாலை 1 மணியளவில், கரூர் ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 35வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வழிதெரியாமல் நின்று கொண்டிருந்தார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 விசாரணையில், கேரள மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டம் கீழ்வாய்ப்பூர் பகுதியை சேர்ந்த சுமிதா ஜான்சன்(34) என்பதும், நர்சாக பணியாற்றி வரும் இவருக்கும், இவரின் கணவர் சாம் ஜான்சனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்தது. பெண் காணாமல் போனது குறித்து ஜூன் 18ம்தேதி கீழ்வாய்ப்பூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கேரள பெண்ணை மீட்ட போலீசார், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில், நேற்று கரூர் ரயில்வே நிலையம் வந்த கேரள போலீசாரிடம் மீட்கப்பட்ட பெண்ணை கரூர் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

Tags : Karur Junction ,Kerala ,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு