×

நாகை மாவட்டத்தில் பெருகி வரும் தண்ணீர் பஞ்சம் குடிநீர் பிடிக்க தட்டுரிக்ஷாவில் நெடுந்தூரம் செல்லும் பெண்கள்

நாகை,ஜூன்21: நாகையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்தால் பொதுமக்கள் தட்டு வண்டிகளில் நீண்ட தூரம் வந்து தண்ணீர் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நாகை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் வசிப்பவர்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாகவே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. நாகை நகராட்சியில் நாகூரில் மட்டும் 11 வார்டு உள்ளது.

இவ்வாறு நாகை நகராட்சியில் உள்ள மொத்தம் 36 வார்டுகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய நாகை புதிய பஸ்ஸ்டாண்ட், நாகூர் என்று உள்ளிட்ட இடங்களில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் தவிர ஓடாச்சேரி நீர் ஆதாரத்தை கொண்டும் குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகையின் காரணமாக போதுமான அளவிற்கு தண்ணீர் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும் பெரும்பாலான வீடுகளில் மின்மோட்டர்களை பொருத்தி தண்ணீரை உறிஞ்சிவிடுகின்றனர். கோடையின் கொடுமையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டதால் நீர் ஆதாரமும் அகல பாதாளத்திற்குள் சென்றுவிட்டது. இதனால் நாகை நகராட்சி சார்பில் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்ய முடிகிறது. சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் என்பது 5 நாட்கள் ஆகிவிடுகிறது.

எனவே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நீண்டதூரங்களுக்கு வந்து தண்ணீரை பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக நாகை கீரைகொல்லைத்தெரு, டாட்டா நகர் பகுதி மக்கள் தட்டு வண்டிகளை வாடகைக்கு எடுத்துகொண்டு நாகை பெருமாள் மேலவீதியில் உள்ள பொது பைப்பில் தண்ணீரை பிடித்து செல்கின்றனர்.

அதே போல் நாகை ஒன்றியத்திற்கு உட்பட்ட புத்தூர், கருவேலங்கடை, பாப்பாக்கோயில், ஏறும்சாலை ஆகிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் ஏறும்சாலையில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திறந்துவிடும் குழாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீரை பல மணி நேரம் காத்திருந்து பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே நாகை நகராட்சி மற்றும் நாகை ஒன்றியத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நாகை பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூறியதாவது:
நாகை நகர பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக நிலவுகிறது. நகராட்சி சார்பில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்தாலும் வசதி படைத்தவர்கள் மின்மோட்டார்களை வீடுகளில் பொருத்தி உறிஞ்சி விடுகின்றனர். இதையும் அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை. அருகில் உள்ள தெருவிற்கு தண்ணீர் பிடிக்க சென்றால் அங்கும் சண்டை வருகிறது.

இதனால் 3 அல்லது 4 வீடுகளை சேர்ந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து தட்டு வண்டியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் காலிகுடங்களை வைத்து தண்ணீர் வரும் இடத்திற்கு சென்று தண்ணீரை பிடித்து வருகிறோம். சில நேரங்களில் தண்ணீர் தேடி நீண்ட தூரம் கூட செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த 3 அல்லது 4 வீடுகளில் வசிப்பவர்கள் தினந்தோறும் சுழற்சி முறையில் தண்ணீர் பிடிக்க செல்வோம். மற்றவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, வீட்டு வேலைகள் செய்வது போன்றவற்றில் ஈடுபடுவோம். இப்படி எங்களுக்குள் வீட்டு வேலைகளை பார்த்துக்கொண்டும் தண்ணீரை பிடித்துக்கொண்டும் இருக்கிறோம்.

இதற்கு நிரந்தர தீர்வு காண 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை லாரிகள் மூலம் எல்லா ஏரியாவிற்கு தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும். லாரிகள் மூலம் தண்ணீர் எந்த நாளில், எந்த இடத்திற்கு வருகிறது என்பதை தெரியபடுத்த வேண்டும். அதேபோல் குடிநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்க வெளிப்படையான தொலை பேசி எண்களை அறிவிக்க வேண்டும் என்று கூறினர்.

Tags : women ,Taturksha ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது