×

மயிலாடுதுறை நகரில் திறந்தவெளியில் கிடக்கும் காலாவதியான மிட்டாய்கள்

மயிலாடுதுறை, ஜூன் 21: நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் நூற்றுக்கணக்கான பெட்டிக்கடைகளும் ஸ்டோர்களும் உள்ளன, நகரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களை குறிவைத்து சாக்லேட்டுக்கள் விற்பனையும் அதிகரித்து வருகிறது.
பல்வேறு தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டாலும், சாக்லேட் மீது குழந்தைகள் முதல் சிறுவர்கள் வரை விரும்பி வாங்கிச் செல்வது வாடிக்கை. சாக்லேட்டில் தயாரிப்பு தேதியோ காலாவதியான தேதியோ குறிப்பிடுவதில்லை.

கடைக்காரராக பார்த்து இது சரியில்லை, வீணாகிப்போய் விட்டது, விற்பனைசெய்யக்கூடாது என்று முடிவெடுத்தால்தான் உண்டு. இல்லை என்றால் வீணாகிப் போன சாக்லேட்டையும் விற்கும் அவலம் உண்டு. மயிலாடுதுறை சுகாதார அதிகாரிகளும் இதுபோன்ற திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சென்று சாக்லேட் போன்ற திண்பண்டங்களை ஆய்வுசெய்து காலாவதியானது உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

கடந்த ஒருசில தினங்களுக்கு முன் மயிலாடுதுறை நகர் தீப்பாய்ந்தாள் அம்மன் ஆலயத்திற்கு செல்லும் வழியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கேகேஆர் நகர் செல்லும் புதிய சாலையில் 100 மீ தூரத்தில் மேல்புறத்தில் குவியலாக யாரோ சாக்லேட்டுக்களை கொட்டிச்சென்றுள்ளனர்.
அந்த வழியாகச் சென்ற ஒருசில சிறுவர்கள் அதை கையில் எடுத்து சாலையில் வீசியும் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு தின்றுக்கொண்டே சென்றனர். மேலும் திருஇந்தளூர் மேலவீதியில் வீசிச் சென்றுள்ளனர்.

இதையும் ஒருசில சிறுவர்கள் எடுத்து சுவைத்துச் சென்றனர். காலாவதியான சாக்லேட்டுக்கள் என்று தெரிந்ததும் அதை அப்படியே குழியில் போட்டு மூடியிருக்க வேண்டும் அல்லது வேறு விதத்தில் அழித்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அதைக்கொண்டுசென்று பொதுமக்கள் செல்லும் சாலையோரம் கொட்டியதால் அதை சிறுவர்கள் எடுத்துச்சென்று சாப்பிடுகின்றனர்.

இதைக்கண்ட ஒருசிலர் அதில் தீயை வைத்துள்ளனர். ஆனால் அது அழிக்கப்படவில்லை. எனவே இதுபோன்று காலாவதியான சாக்லேட்டுக்கள் திறந்தவெளியில் கொட்டாமல் இருக்கவும், காலாவதியான சாக்லேட்டுக்கள் இருந்தால் அவற்றை கண்டுபிடித்து திரும்ப பெற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mayiladuthurai ,
× RELATED சீர்காழி அருகே குடிநீர் வழங்காததைக்...