மானியத்தில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பெரம்பலூர், ஜூன் 21: பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் மகளிர்கள், இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்ட த்தின்கீழ் பயன்பெற ஜூலை 4ம் தேதி வரை விண்ணப்பங்கள் அளிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் மானியம் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் மொத்த தொகையில் 50 சதவீத தொகை இரண்டில் எது குறைவோ அது அரசு மானியமாக வழங்குகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ரூ.31,250 வழங்கப்படும். 125சிசிக்கு குறைவான, கியர் இல்லாத வாகனத்தை பயனாளிகள் தங்களது சொந்த நிதியிலிருந்து வங்கி கடன் அல்லது கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று வாங்கலாம். மானியம் பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறும் பயனாளிகள் 18 முதல் 40 வயது வரை உள்ளவராகவும், இருசக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பழகுனர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மானியத்தொகை போக இருசக்கர வாகனத்தின் மீத தொகையை செலுத்த விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

அமைப்புசாரா மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், சுயமாக தொழில் செய்யும் பெண்கள், அரசு நிதியுதவி பெறுகிற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு திட்டங்கள் சமூக அடிப்படை நிறுவனங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மகளிர் கற்றல் மையம் ஆகிய நிறுவனங்களில் தொகுப்பூதியம், தினக்கூலி அல்லது ஒப்பந்த ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் மகளிர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களாக இருக்க வேண்டும். பயனாளிகள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோ அல்லது தோல்வியுற்றோ இருக்க வேண்டும்.

ஏற்கனவே 2017-18ம் ஆண்டுக்கு விண்ணப்பித்து மானியம் கிடைக்க பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து ஜூலை 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : wheelers ,
× RELATED காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை...