×

வெள்ளாற்றில் மணல் திருடிய 4 பேர் மீது வழக்குப்பதிவு

செந்துறை, ஜூன் 21: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிவராமபுரம் வெள்ளாற்றில் இரவு நேரங்களில் சிலர் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது தளவாய் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட நிர்வாகத்தினர் வருவாய்த்துறையினர், போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்தும், அபராதம் விதித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளாற்றில் சன்னாசிநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிவராம்புரம் பகுதியில் அனுமதியின்றி பொக்லைன் மற்றும் லாரிகள் கொண்டு மணல் கடத்தப்படுவதாக தளவாய் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட இடத்துக்கு தளவாய் போலீசார் சென்று பார்த்தனர். போலீசார் வருவதை பார்த்த மணல் கடத்தும் கும்பல், பொக்லைன் வயர்களை அறுத்து விட்டு தப்பி சென்றனர். இதனால் போலீசார், வாகனங்களை பறிமுதல் செய்ய முடியாமல் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் வேறு வாகனங்களின் உதவியோடு பொக்லைன், லாரியை தளவாய் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் போலீசில் சன்னாசிநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்தார். அதன்பேரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட அங்கனூரை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வீரவளவன், வீரமணி, இடையகுறிச்சி கொளஞ்சி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...