×

செங்கம் அருகே 3 லட்சம் செம்மரக்கட்டை பறிமுதல்

செங்கம், ஜூன் 21: செங்கம் அருகே நேற்று காலை வேனில் கடத்தி வந்த ₹3 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஜவ்வாதுமலையில் இருந்து வேனில் செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்தப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு நேற்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வன அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள வனவர் ஜனாவிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ஜவ்வாதுமலை அடிவாரம் பரமனந்தல் கிராமத்திற்கு செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தினார். வன அதிகாரியை பார்த்ததும் வேனில் வந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.இதையடுத்து, வேனில் சோதனை செய்தபோது ஜவ்வாதுமலையில் இருந்து செம்மரம் வெட்டி கடத்தியது தெரியவந்தது. பின்னர், செம்மரக்கட்டைகளை, வேனை பறிமுதல் செய்து செங்கம் வன அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ெசம்மரகட்டைகளின் மதிப்பு சுமார் ₹3 லட்சம் ஆகும். இதுகுறித்து, வழக்குப்பதிந்து தப்பி ஓடியவர்களை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.ஜவ்வாதுமலையில் இருந்து கீழே இறங்குவதற்கு 4 வழிகள் உள்ளது. அதில் ஆலங்காயம், அமிர்தி, போளூர் ஆகிய பகுதிகளில் வனத்துறை செக்போஸ்ட் உள்ளது. மேல்பட்டு வழியாக பரமனந்தல்-செங்கம் செல்லும் சாலையில் சோதனை சாவடி இல்லை. எனவே இப்பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தப்படுவது உட்பட பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே அப்பகுதியில் செக்போஸ்ட் அமைத்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chengam ,
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆணை