×

பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஜெர்மன் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு

திருப்பூர், ஜூன் 21:திருப்பூரில் உள்ள சாய பட்டறைகளின் சாய கழிவுகளை சுத்திகரிப்பு செய்யும் நிலையங்களை ஜெர்மன் நாட்டைச்சார்ந்த தொழில் நுட்ப குழுவினர் பார்வையிட்டு தங்கள் நாடுகளில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட சாயப்பட்டறைகள் இயங்கி வருகிறது. சாயப்பட்டறைகளிலிருந்து தினமும் 10 கோடி லிட்டருக்கு மேல் சாய கழிவு நீரை வெளியேற்றி வந்தனர். இந்த சாய கழிவு நீரால் விளைநிலங்கள், கிணறு, ஆழ்குழாய் கிணறு ஆகியவை அமிலம் கலந்த நீரால் விவசாயம் பட்டுப்போனது, தென்னை மரங்கள் கருகியது. உப்பு நீராக மாறியதால் பொது மக்கள் உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து விவசாய சங்கங்கள் ஆதாரத்தோடு நீதிமன்றத்தி–்ல் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 2011 ம் ஆண்டு சாயப்பட்டறைகள் இயங்க தடை விதித்து தீர்ப்பு கூறினர். இதைதொடர்ந்து சாயபட்டறை உரிமையாளர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று சாய கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வது குறித்து தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ஆலோசனை பெற்றனர். திருப்பூரில் பல கோடி  ரூபாய் மதிப்பில் 18 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தனர். பொருளாதாரத்தில் முன்னேறிய ஒரு சில சாபட்டறை  உரிமையாளர்கள் தனியாக  சாய கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்துக்கொண்டனர்.  பல கோடி லிட்டர் சாய கழிவு நீரை சுத்திகரிப்பு செய்த பின் மீண்டும் பயன்படுத்த துவங்கினர்.

இதனால், 10 கோடி லிட்டர் தண்ணீர் தேவை 2 கோடி லிட்டர் தண்ணீர் தேவையாக குறைந்தது. சாயப்பட்டறைகைளின் சாய கழிவு நீர் சுத்திகரிப்பு குறித்து திருப்பூர் வடக்கு, தெற்கு ஆகிய மாசுகட்டுப்பாட்டுவாரியம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.  சாயப்பட்டறைகளுக்கு பல்வேறு விதிமுறைகளை கூறி நீதிமன்றம்  கடந்த 2014 ம் ஆண்டு சாயபட்டறை இயங்க அனுமதி வழங்கியது.  திருப்பூரில் செயல்படும் சாயப்பட்டறைகளிலிருந்து வெளியேறும் சாய கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யும்  பூஜ்ய கழிவு திட்டம் குறித்து அறிய ஜெர்மன் குழுவினர் மூன்று நாள் பயணமாக திருப்பூர் வந்தனர். இவர்கள் திருப்பூரில் செயல்படும் பொது கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சென்று சாய கழிவு நீரை சுத்தகரிப்பு செய்யும் தொழில் நுட்பத்தை பார்வையிட்டு தொழில்நுட்ப பிரிவு ஊழியர்களிடம் விளக்கம் பெற்றனர். இதைதொடர்ந்து சாயப்பட்டறை உரிமையாளர்கள், பொது சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர்கள், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் திருப்பூர்-காங்கேயம் ரோட்டில் உள்ள காயத்திரி மஹாலில் நேற்று நடந்தது. இதில், பூஜிய கழிவு திட்டம் குறித்து ஜெர்மன் குழுவினருக்கு விளக்கம் அளித்தனர். ஜெர்மன் குழுவினர் தங்கள் நாடுகளில் இத்தகைய திட்டங்களை அமுல்படுத்த உள்ளதாக தெரிவித்தனர். கோவை மண்டல சுற்றுச்சூழல் துறை இணை பொறியாளர் அசோகன், வடக்கு மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செந்தில்விநாயகம், தெற்கு  மாசுகட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் உதயகுமார், சாயப்பட்டறை உரிமையாளர் சங்க தலைவர் நாகராஜன்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : team ,German ,wastewater treatment plants ,
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...